தமிழகத்தின் பாரம்பரியமும், பழம்பெருமையும் வாய்ந்த ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டபோது, ஒட்டு மொத்தத் தமிழக மக்களும் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராடிய எழுச்சியை யாராலும் மறக்கமுடியாது. மெரினாவில் கடல் அலை போல் திரண்ட மக்கள் கூட்டத்தையும் மறந்து விட முடியாது.
தன்னெழுச்சியாக நடந்த இப்போராட்டங்களின் விளைவாக தடை தகர்க்கப்பட்டது. மீண்டும் ஜல்லிக்கட்டு நடந்தது.
தை மாதம் பிறக்கப் போகிறது என்றாலே பொங்கல் திருநாளும், ஜல்லிக்கட்டும்தான் தமிழக மக்களின் நினைவுக்கு வரும். விரைவில் வரவிருக்கும் தை மாதப் பிறப்பை முன்னிட்டு, தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் ஆர்வலர்கள் தங்கள் காளைகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கிவிட்டனர்.
காளைகளுக்கு நடைப்பயிற்சி, மண் குத்துதல், நீச்சல் பயிற்சி, வடம் போடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. காளைகளுக்கு சிறப்பு உணவாக கடலை மிட்டாய், பாதாம் பருப்பு, தேங்காய் பூ ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், ஏன் தமிழக மக்களே ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனு நவம்பர் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது. தடையை உடைத்தெறிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதில் ஐயமில்லை.
வாடிவாசல் திறக்கட்டும்; ஜல்லிக்கட்டு நடக்கட்டும்!