Homeதலையங்கம்பின்னலாடை, விசைத்தறி தொழிலுக்கு நெருக்கடி!

பின்னலாடை, விசைத்தறி தொழிலுக்கு நெருக்கடி!

மாதந்தோறும் அபரிமிதமாக உயர்ந்து வரும் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் பின்ன லாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி மையங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கி, இன்றும் தொடர்கிறது. இப்போராட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி நிறுவனங்கள் முழுமையாக பங்கேற்றுள்ளன.

இந்த தொழிலுக்கு நூல் தான் பிரதான மூலப்பொருள். ஆனால் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்ததால், தொழில் துறையினர் பலரும் விரக்தியின் உச்சநிலைக்கு சென்றனர். வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.1 லட்சத்தைக் கடந்திருப்பதால், வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கு யார் காரணம்? பிரதமர் மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்திய பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதனை தொழில் துறையினருக்கு சரியான விலையில் வழங்கிட வேண்டும்.

ஆனால், 2021 ஆம் ஆண்டில், இந்திய பருத்தி கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பாஜக அரசு தடுத்துவிட்டது.

இதனால், பன்னாட்டு&உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள்.

இதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு அதி முக்கிய காரணம்.

இந்த நெருக்கடிக்கு என்ன தான் தீர்வு? அத்தியாவசிப் பொருள் பட்டியலில் பஞ்சை இடம்பெற செய்ய வேண்டும். அதேசமயம், பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.

நூல் இறக்குமதிக்கான வரியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதற்காகத்தான் பின்னலாடை, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் பஞ்சு மற்றும் நூலின் அதீத விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

எனவே, மத்திய அரசு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இந்திய பருத்தி கழகம் மூலம் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து வருடம் முழுவதும் பஞ்சாலைகளுக்கு சரியான விலையில் தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு செவி மடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img