ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் என்று தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.- கோவையில் ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பழைய வாகன உதிரிபாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்பவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகன ஒர்க் ஷாப் முதலாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வியாபாரிகள் பழைய வாகனங்களை உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்ய முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை
மேலும் தாங்கள் பெறும் உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், மற்றும் பழைய வாகனங்களை உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உடைக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
அதேபோல கடைக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தால் அதனை வாங்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் உரிமம் வைத்திருப்பவர் இரண்டாவது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு வந்த விற்பனையாளர்கள் காவல்துறையின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதியளித்தனர்.