நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 224 பேர் படித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக் காலம் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனடிப்படையில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என்று உத்தரவிட்டு, 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி உள்ளார்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய, நுழைவுத்தேர்வு தடையாக இருக்கிறது என்பதை அறிந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அதனை ரத்து செய்தார்.
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள் தான். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5% இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது.
அனைத்து வகையான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு துறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுகிறார்கள்.
யார் யார்
அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் கல்லூரிகளில் 107 மாணவர்கள், 69 மாணவிகள். சட்டக் கல்லூரிகளில் 1 மாணவர், 3 மாணவிகள்.
கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 4 மாணவிகள். விவசாயக் கல்லூரிகளில் 3 மாணவர்கள், 9 மாணவிகள்.
விவசாய பட்டயப் படிப்பு கல்லூரியில் 1 மாணவர்.
மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளில் செவிலியர் கல்வி 3 மாணவிகள், மருத்துவ ஆய்வக கல்வி 2 மாணவிகள், மருத்துவ உதவியாளர் கல்வி 2 மாணவிகள், உணவுபதப்படுத்துதல் கல்வி 1 மாணவி, மருத்துவ அவசரகால சிகிச்சை தொழில்நுட்ப கல்வி 1 மாணவி, இளநிலை முடநீக்கு சிகிச்சை மருத்துவம் 1 மாணவி, ஆயுர் வேத மருத்துவ கல்வி 1 மாணவி என மொத்தம் 11 மாணவிகள். மருத்துவ கல்லூரிகளில் 16 மாணவ, மாணவிகள் என மொத்தம் 224 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
“அப்பா ஆசைப்பட்ட மாதிரி சீட் கிடச்சுது”
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியில் பயின்று வரும் மாணவி வி.பவித்ரா தெரிவித்ததாவது:
திருச்செங்கோடு கவர்மெண்ட் கேர்ல்ஸ் ஸ்கூல்ல 12-வது வரைக்கும் படிச்சேன். 12-வது முடிச்சிட்டு எந்த காலேஜ் போலாம், என்ன டிகிரி படிக்கலாம்னு இருந்தப்போ எங்க அப்பா வந்துட்டு லா (சட்டம்) படி பாப்பா அப்படினு சொன்னங்க. லா -க்கு அப்ளை பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.
சீட் கிடைக்குமா என்ன ஏதுனு எதுமே தெரியல. அப்பதான் நம்ம முதல்வர் கொண்டு வந்த 7.5 பர்சன்டேஜ் இடஒதுக்கீடுல கவர்மெண்ட் ஸ்கூல படிச்சவங்களுக்கு எல்லாம் சீட் கிடைச்சது. எனக்கு எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி லா (சட்டம்) படிக்க இடஒதுக்கீட்ல சீட் கிடச்சது. எங்களுக்கு ரொம்ப சந்தோசம். முதல்வருக்கு நாங்க நன்றி சொல்லிக்கிறோம். ரொம்ப நன்றி என்றார்.
“அம்மா ரொம்ப
சந்தோசப்பட்டங்க”
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ம.சாலினி தெரிவித்ததாவது: அரசு மேல்நிலைப்பள்ளி மாணிக்கம்பாளையம்ல படிச்சேன். எங்க அப்பா பேரு மணிகண்டன். எனக்கு அப்பா இல்லை. அம்மா கூலி வேலைக்கு தான் போறாங்க.
நான் 12-வதுல ஸ்கூல் செகண்ட் (பள்ளி 2-ம் இடம்). எனக்கு லா படிக்கனும்னு ஆசை. எனக்கு காலேஜ்ல சீட் கிடைக்குமான்னு தெரியல. வேற என்ன படிக்கலாம்னு ஐடியாவே இல்லை.
அப்ப தான் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சவங்களுக்கு 7.5 பர்செண்டேஜ் ரிசர்வேசன்ல அப்ளிகேசன் போட்டேன். எனக்கு லா படிக்க சீட் கிடைச்சு இருக்கு. இப்ப நான் ஆசைபட்ட மாதிரி லா படிச்சுட்டு இருக்கேன்.
என்னோட ஊரு நாமக்கல் தான். எனக்கு நாமக்கல் லா காலேஜ்ல சீட் கிடச்சு இருக்கு. எங்க அம்மா ரொம்ப சந்தோசப்பட்டாங்க. என்ன மாதிரி கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற வசதி இல்லாதவங்க உயர்கல்வி படிக்கனும்னு இட ஒதுக்கீடு அறிவிச்ச முதல்வருக்கு நன்றி என்றார்.
“லா படிச்சிட்டு
பெரிய உத்யோகம் போவேன்”
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாண வன் ர.மகித் தெரிவித்ததாவது:
தண்ணீர் பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலே படிச்சேன். 1-வதுல இருந்து 12-வது வரைக்கும் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன். அப்பா, அம்மா ரெண்டு பேரும் கூலி தொழிலாளி தான்.
எனக்கு சின்ன வயசுல இருந்து லா படிக்கனும்னு தான் இன்ட்ரெஸ்ட். 12-வது முடிச்சுட்டு கொஞ்சம் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணதலா லா படிக்க அப்ளிகேசன் போட்டேன். அப்போ முதல்வர் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சவங்களுக்கு 7.5 பர்சென்டேஜ் ரிசர்வேசன் வழங்கினாரு.
அதுல எனக்கும் என்ன போல கவர்மெண்ட் ஸ்கூல படிச்சவங்களுக்கும் படிக்க சீட் கிடைச்சது. அது எனக்கு ரொம்ப சந் தோசமா இருக்கு. நான் லா படிச்சுட்டு பெரிய பெரிய உத்யோகத்துக்கு போ வேன். எனக்கும் என்னை போல கவர்மெண்ட் ஸ்கூல படிச்ச நிறைய பேருக்கு உயர் கல்வி படிக்க நல்ல கல்லூ ரில சீட் கிடைக்க 7.5 பர்சென்டேஜ் இடஒதுக்கீடு செய்த முதல்வருக்கு ரொம்ப நன்றி என்றார்.
“டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை”
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி பூ.கிருத்திகா தெரிவித்ததாவது:
எங்க அப்பா பேரு பூபதி. அம்மா தாமரைச்செல்வி. நாங்க வீட்ல 3 பொண்ணுங்க. நா மூத்த பொண்ணு. எங்க ஊரு பாண்டமங்கலம்.
எங்க அப்பா 2015-ம் வருசம் ரோடு ஆக்சிடெண்டுல இறந்துட்டாரு. எங்க அம்மா கிடைக்கிற வேலைகளை செஞ்சுட்டு இருக்காங்க. அதுல வர வருமானத்தில தான் என்னையும், என்னோட சகோதரிகளையும் படிக்க வச்சுட்டு வராங்க.
எங்க குடும்ப சூழ்நிலை காரணமாக நான் 6-வதுல இருந்து 12-ம் வகுப்பு வரைக்கும் பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தான் படிச்சேன். 12-ம் வகுப்பில 600 க்கு 569 மார்க் வாங்கினேன்.
எனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. நான் கால்நடை மருத்துவப்படிப்புக்கு முதல்வரின் 7.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிப்புல விண்ணப்பிச்சேன். எனக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில சீட் கிடைச்சு இருக்கு.
எங்க அம்மா ரொம்ப சந்தோசப்பட்டாங்க. கண்டிப்பாக கால்நடை மருத்துவக் கல்லூரியை முடித்து எனது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று முதல்வருக்கு உறுதியளிக்கிறேன்.
என்னை போல கஷ்டப்படற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்விபயில வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதல்வருக்கு நானும் எங்க குடும்பமும் மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி தெரிவிச்சுகறோம் என்றார்.
தொகுப்பு:
சி.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மற்றும்
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நாமக்கல் மாவட்டம்.



