தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு முதல் கட்டமாக தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில் (சிட்ரா) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: ஐந்து ஆண்டுகளில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் 7 இடங்களில் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நூற்பு, நெசவு, துணி பதனிடுதல், சாயமிடுதல், அச்சிடுதல், ஆடைகள் உற்பத்தி ஆகிய பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்வதன் மூலம் உலக தரத்திலான தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தமுடியும்.
இதன்மூலம் அதிக அளவு முதலீடுகளை ஈர்த்து அதிக அளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்க முடியும். பொது-தனியார் கூட்டமைப்பு அடிப்படையில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சொந்தமான சிறப்பு முகமையின் மூலம் இந்தப் பூங்கா உருவாக்கப்படும்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைப்பது குறித்து முதல்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், கைத்தறித் துறை ஆணையர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் சமீரன், ஜவுளித் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



