சென்னையில் புறநகர் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களின் அதிவேக பயணங்கள் மட்டுமின்றி பைக் ரேஸ், வீலிங் போன்ற இளைஞர்களின் சாகசங்களும் சக பயணிகளை அதிர்ச்சிக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கி வருகின்றன.
பெரும்பாலும் 18 வயது முதல் 25 வயது வரையிலுமான இளைஞர்களாக இவர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும், இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதை போக்குவரத்து விதிமீறலாக மட்டும் கணக்கில் கொண்டு அபராதம் விதிப்பதே அதிகபட்ச தண்டனையாக இருப்பதால் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
வாகனங்களை ஓட்டி செல்லும் தன்னுடைய உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் சக பயணிகளுக்கும் உயிர் ஆபத்து விளைவிக்க கூடிய வாய்ப்புள்ள நிலையில் பைக் ரேஸ் என்பதை போக்குவரத்து விதிமீறலாக மட்டும் கருதக்கூடாது.
தொடர்ந்து இந்த விதிமீறல்களில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய கொடுங்குற்றமாக்கினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
குறைந்தபட்சம் நெடுஞ்சாலைகளில் இத்தகைய பந்தயங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்வது பற்றியும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக முடக்குவது பற்றியும் கூட பரிசீலிக்கலாம்.



