சென்னையில் இந்தோ யுஏஇ பொருளாதார வர்த்தக சபையை, மெஜஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் எச்.எச்.ஷேக் மஜித் ரஷித் அல் முல்லா துவக்கி வைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆளும் குடும்ப உறுப்பினர் ஷேக் சுல்தான், ஆப்பிரிக்கா வேர்ல்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹெய்ன் ஹெல்ம், ஆற்காடு நவாப் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரபு இன்பதாஸ், இயக்குனர் ஸ்ரீதேவி அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், உலகளாவிய ரத்தினங்கள் மற்றும் நகை வணிகத்தில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மெஜஸ்டிக் இன்வெஸ்ட் மென்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு நாடுகளிலும் வைரத் தொழிலை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றவும் எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா வேர்ல்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டது.
எச்.எச்.ஷேக் மஜித் ரஷித் அல் முல்லா கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் 80 சதவீதம் கல் பதிக்கப்பட்ட நகை, நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தங்க நகைகள், கற்கள் பதித்த தங்க நகைகளின் ஏற்றுமதியானது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2023-ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றார்.
எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபு இன்பதாஸ் கூறுகையில், இந்த ஒப்பந்தங்கள் உலகளவில் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் தொழில்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றார்.
எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் இயக்குனர் ஸ்ரீதேவி அருணாச்சலம் பேசுகையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருவதே இந்த சபையின் முக்கிய குறிக்கோளாகும் என்றார்.



