fbpx
Homeதலையங்கம்கருத்தில் கொள்ளப்பட வேண்டும்

கருத்தில் கொள்ளப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 1 லட்சம் இலங்கை தமிழர்கள் தங்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும் அகதிகளின் குடியுரிமை கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மறுவாழ்வு முகாம்களில் இருந்து பிற ஊர்களுக்கு சென்று வேலை வாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

2019ம் ஆண்டின் குடியுரிமை திருத்தச்சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்களை போல தங்களுக்கும் குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது அவர்களின் வருத்தமாக இருக்கிறது.

இலங்கையில் பூர்வீக தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்ததாலேயே அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்தனர்.

அதுவே போர்ச்சூழலை நோக்கியும் தள்ளியது. 1981ல் இலங்கையில் 12.7 சதவீதமாக இருந்த இலங்கை தமிழர்களின் மக்கள் தொகை 2021ல் 10.8 சதவீதமாக குறையும் என்றும், இது 2041ல் 9.9 சதவீதமாக மேலும் குறையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் பாதுகாப்பு உணர்வுடன் வாழ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே போல இலங்கையில் வாழும் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு மக்கள் தொகையில் அவர்களின் விகிதாச்சாரம் குறைந்து விடக்கூடாது என்பதும் முக்கியம். இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கையில் பேசப்படாத இந்த பிரச்சினையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img