Homeதலையங்கம்கச்சத்தீவை இந்தியா தன்வசப்படுத்துமா?

கச்சத்தீவை இந்தியா தன்வசப்படுத்துமா?

இந்தியாவுடனான சர்ச்சைக்கு காரணமான கச்சத்தீவை இலங்கை திருப்பிக் கொடுக்குமா? அல்லது நீண்டகால குத்தகைக்கு தருமா? என்கிற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ள நிலையில் இலங்கையில் உள்ள முக்கிய தீவுகளில் ஒன்றான உச்சமுனி தீவை சுவிஸ் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்துள்ளது என்று சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

1,500 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கும் கற்பிட்டி தீவுக்கூட்டத்தின் 2-வது பெரிய தீவான உச்சமுனி தீவு 417 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டது.

அத்துடன் உச்சமுனி தீவு எந்த கட்டுமானத்திற்காக குத்தகைக்கு விடப்பட்டது என்பது தெளிவாக இல்லை. இத்தீவில் எந்தவொரு கட்டுமானமும் செய்யப்படுவதற்கு முன்னர் தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சான்றிதழைப் பெறவில்லை என்று இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை. தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஏராளமான கடனுதவி வழங்கி வருகிறது.

இதனால் சுவிஸ்க்கு உச்சமுனி தீவை கொடுத்தது போல கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை நிரந்தரமாக இந்தியா திருப்பித் தருமாறு கேட்டுப் பெறலாம் என்கிற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.

இது சரியான யோசனையாகத் தான் தோன்றுகிறது. கச்சத்தீவு நம் கைக்கு மீண்டும் வருமானால் அதுவே தமிழக & இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு அடிகோலும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் ஆவதும் பெருமளவில் குறைந்து போகும். இரு நாடுகள் இடையே நல்லுறவு மேம்படும். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இருநாட்டு மீனவர்களால் களைகட்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை நிரந்தரமாக இந்தியா வசப்படுத்தினானோ அல்லது குத்தகை மூலம் 99 ஆண்டு காலத்திற்கு பெற்றாலோ எது நடந்தாலும் அது தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.

இதைவிட வேறென்ன வேண்டும்?

படிக்க வேண்டும்

spot_img