Homeதலையங்கம்ஒற்றைத் தலைமை அ.தி.மு.கவில் சாத்தியமா?

ஒற்றைத் தலைமை அ.தி.மு.கவில் சாத்தியமா?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்திருக்கும் சூழலில் சட்டரீதியாக அதற்கான சாத்தியம் இல்லை என மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

அதிமுக பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இருவருக்குமான அதிகார போட்டி நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என ஒரு தரப்பு கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிப்பது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தற்போதைய சூழலில் கூட்டுத் தலைமையே அதிமுகவுக்கு தேவை என்ற கருத்தும் இன்னொரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததோடு, தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதாவது 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து சட்டத் திருத்தம் மேற்கொள்வதோடு அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்தில் பெற வேண்டி உள்ளது.

இதற்கிடையில் கட்சியின் பெயரும் சின்னமும் ஓ.பன்னீர்செல்வம் அணியிடம் இருப்பதால் ஒற்றைத்தலைமை என்பது தற்போதைய காலத்தில் சாத்தியமில்லை என்ற கருத்துக்கும் அழுத்தம் தரப்படுகிறது.

நேற்று பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., `ஒற்றைத் தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கிறது. பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது.

இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது; பொதுச்செயலாளர் பதவி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; இதுகுறித்து தீர்மானம் போடப்பட்டுள்ளது; மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுத்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம், என்று ஆணித்தரமாக ஒற்றைத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.

மேலும் ஒற்றைத் தலைமை தீர்மானத்துக்கு என் அனுமதி தேவை. அப்படி இல்லாவிட்டால் அது சட்டப்படி செல்லாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளது எடப்பாடிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் எடப்பாடி தரப்பு விடாப்பிடியாக இருப்பதால் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் இருப்பது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதிமுகவின் தலைவிதியை நிர்ணயிக்கவே அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி கூடுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img