Homeதலையங்கம்ஒரே நேரத்தில் இரு பட்டம்: யு.சி.ஜி. முடிவு நன்மை தருமா?

ஒரே நேரத்தில் இரு பட்டம்: யு.சி.ஜி. முடிவு நன்மை தருமா?

ஒரே நேரத்தில் இரு முழுநேர பட்டப்படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம் என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை அடிப்படையிலும், மாணவர்கள் தங்களின் பன்முக திறனை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, மாணவர்கள் இரு வேறு பட்டப்படிப்புகளை, ஒரு பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலோ மேற்கொள்ள முடியும். அதாவது, இரு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புகளை, ஒரே நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியும்.இந்தப் பட்டப் படிப்புகளை மாணவர்கள் நேரடியாக கல்லூரி களுக்கு சென்றோ, தொலைதூர கல்வி வாயிலாக, ‘ஆன்லைன்’ வாயிலாகவோ மேற்கொள்ளலாம்.

இதன் வாயிலாக, இயற்பியல் அல்லது வேதியியலில் பி.எஸ்சி., சேரும் தகுதியான மாணவர், இனி, பி.ஏ., ஆங்கிலமோ, வரலாறோ, தமிழோ அல்லது பி.காம்., பட்டப்படிப்பையோ ஒரே நேரத்தில் படிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஒரு பாடப்பிரிவை படிக்கும் மாணவர்கள், மற்ற பாடப்பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தது. அது, தற்போது மாறியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்பை பெற, இன்று கடுமையான போட்டி சூழ்நிலை நிலவுகிறது.
அதனால், மாணவர்கள் ஒரு பாடப்பிரிவில் மட்டுமின்றி, பல பாடங்களையும், பாடங்களுக்கு அப்பாற்பட்டு, தொழில் புரிய தேவையான சில பயிற்சிகளையும் பெறுவது அவசியமாக உள்ளது. அத்துடன் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர், ஒரு பாடத்தில் மட்டுமின்றி, பல பாடங்கள் குறித்த பரவலான அறிவையும் பெற்றிருப்பது அவசியம். அதற்கு, இந்த இரட்டை பட்டம் பெறும் முறை பெரும் உதவியாக இருக்கும்.

அதேநேரத்தில், இப்புதிய முறையால், மாணவர் கள் முழு நேர பட்டப்படிப்பில் போதிய கவனம் செலுத்துவது குறையும்.

அத்துடன் பட்டப்படிப்பிற்கு உள்ள மதிப்பும் குறையும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெறுவதிலேயே அக்கறை காட்டுவரே தவிர, அறிவுப்பூர்வமான விஷயங்களை அறிந்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.

ஒரே நேரத்தில் இரு வேறு கல்வி நிறுவனங்களில், வெவ்வேறு பட்டப்படிப்பு படிக்கும் போது, பாடவகுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்வது, ஒரே நேரத்தில் பல தேர்வுகளை எழுதுவது உட்பட பல பிரச்சினைகளை சந்திக்கவும் நேரிடும். அதனால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிப்பது குறையும் என்ற குற்றச்சாட் டுகளும் கூறப்படுகின்றன.

திட்டம் நடைமுறைக்கு வரும்போது தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியவரும். எது எப்படியோ, ஒரே நேரத்தில் இரு பட்டங்கள் பெற மாணவர் களுக்கு அனுமதி வழங்கியது வரவேற்கத் தக்க தாகவே தெரிகிறது.

மாணவர்களும் வரவேற்கிறார்கள்; நாமும் வரவேற்போம்!

படிக்க வேண்டும்

spot_img