தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆக உள்ளது.
இதில் 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 5-&14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 15-65 வயதுக்கு உள்ளானவர்கள் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டோர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 269 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 186 பேர் தங்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்புளூயன்சா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் ஏறத்தாழ ஒன்றேகால் லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல் காய்ச்சலுக்கு என ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த வைரசின் தாக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டாலே போதும். அதற்கு முன்பு டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது அவசியம்.
கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் சகஜநிலைக்கு திரும்பிவிட்ட நிலையில் தற்போது இன்புளூயன்சா மிரட்டுகிறது. கொரோனா எனும் கொடிய வைரசையே துரத்தியடித்த நமக்கு இன்புளூயன்சா எம்மாத்திரம்?
கொரோனாவுக்காக முக கவசம் அணிந்த நம்மில் பெரும்பாலானோர் அதை அணிவதைத் தவிர்த்து விட்டோம். இன்புளூயன்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனாவைத் தடுக்க முககவசம் அணியவேண்டும் என்ற விதி திரும்பப்பெறப்படவில்லை. எனவே இன்புளூயன்சா காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமே முக கவசம் அணிய வேண்டும் என்பதில்லை. மீண்டும் அனைவரும் முக கவசம் அணிவோம்.
இன்புளூயன்சா காய்ச்சல் வந்தவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு தன் குடும்பத்தினரையும் அக்கம் பக்கம் இருப்பவர்களையும் பாதுகாக்கிறார்கள். சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வுடன் இருப்போம். இன்புளூயன்சா காய்ச்சலை அடியோடு விரட்டுவோம்!