fbpx
Homeதலையங்கம்இந்திய ஒருமைப்பாட்டுக்கு அமித்ஷா வைக்கும் வேட்டு!

இந்திய ஒருமைப்பாட்டுக்கு அமித்ஷா வைக்கும் வேட்டு!

மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் இந்தி என்றாலே நெருப்புப் பொறி பறக்கும். கஸ்தூரிரங்கன் கமிட்டியின் வரைவு அறிக்கை பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய மொழிக் கொள்கை குறித்த அறிக்கை ஒன்றை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தது நினைவிருக்கலாம்.

அதில் தாய் மொழி, ஆங்கிலம், இவற்றுடன் மூன்றாவதாக ஒரு தேசிய மொழி கற்றுத் தரப்பட வேண்டும். அது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியாகவும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு இந்திய மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கை வெளியானதும் தமிழகமே கொதித்து எழுந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு உடனே எதிர்வினையாற்றி “இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல, மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை தேர்ந்தெடுத்து படிக்கலாம்” என அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல” என கொளுத்திப் போட்டிருக்கிறார்.

ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன. அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், `இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். ‘இந்தி மாநிலம்‘ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? என்றும் கேட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

தி.மு.க எம்.பி கனிமொழி, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும்.

அதை ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.

மாறாக, இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டால் வேற்றுமையில் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும். இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங்களில் போர்க்குரல் எழும்பும். தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறும் அதையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா எதை விரும்புகிறார்? இந்தியைத் திணித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பது தான் அவரது நோக்கமா?
அது ஒருபோதும் நடக்காது!

படிக்க வேண்டும்

spot_img