நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி; சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி… பணம் துள்ளி விளையாடும். ஓட்டுக்கு ரூ.100, ரூ.500, ரூ.1000 எனக்கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்தினாலும் பணப் பட்டுவாடாவை முழுமையாக தடுக்க முடிவதில்லை.
தேர்தல் சமயத்தில் ஆதாரங்களுடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு நீதி மன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதும் உண்டு.
இந்தநிலையில் ஓட்டுக்கு பணம் தரும் ஜனநாயக விரோத செயலுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது, ஐதராபாத் சிறப்பு நீதிமன்றம் ஓட்டுக்கு பணம் கொடுத்த புகாரில் தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் (டிஆர்எஸ் கட்சி) மாலோத் கவிதாவுக்கும் அவரது உதவியாளர் சௌகத் அலிக்கும் தலா ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து வரலாற்று தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிட்டிங் எம்பிக்கு சிறை தண்டனை கிடைத்திருப்பது நாட்டில் இதுவே முதல் தடவை. இது அனைத்து கட்சியினருக்கும் ஓர் எச்சரிக்கை மணி.
சமீபத்திய தேர்தலின் போது பண விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்ட தகுந்தவை. வரும் தேர்தல்களின்போதும் தனது இரும்பு கரங்களால் ஆணையம் தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் என்பதில் ஐயமில்லை.
அதுமட்டும் போதுமா? வேட்பாளர்களிடம் பணம் வாங்க கூடாது என வாக்காளர்களும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.இது நடக்குமா? நடக்க வேண்டும்; ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிறைதண்டனை நிச்சயம் என்ற நிலை பரவலாகும் போது அது நடக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.



