தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்கள் கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மழை குறைந்தபோதிலும், ஒரு நாள் பெய்த கனமழையே மாநகரை வெள்ளக்காடாக மாற்றிவிட்டது. பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழக அரசின் மீட்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் தங்கள் குறைகளோடு 2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதையும் சுட்டி காட்டுக்கின்றனர். அதன் பின்னராவது மழை நீர் தேங்காதபடி அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் முறையிடுகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் சேரன், சென்னை வெள்ள நிலவரத்தை சுட்டிக்காட்டி முந்தைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? என அதிமுகவுக்கு எதிராக மிக காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி, சென்னைக்கு மட்டும் ரூ.900 கோடியை மத்திய அரசிடம் இருந்து வாங்கினார்களே… இது தான் அந்த திட்டத்தை செயல்படுத்திய நகரமா? இந்த பைலை முதலில் எடுங்க’ என்று தனது பதிவில் அவர் குமுறி உள்ளார்.
இது தான் மழையால் பாதிக்கப்பட்டு தவிக்கும் சென்னை மக்களிடமும் எதிரொலித்திருக்கிறது. ஆனாலும் அதன்மீது கவனம் செலுத்தவேண்டிய நேரம் இதுவல்ல.
தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. தற்போதைய பாதிப்பை சீர்செய்வதோடு வருமுன் காக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. மக்களின் துயர் துடைக்கும் பணி தொடரட்டும்.



