வள்ளுவர் கூறியது போல நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் பெரியாரும் ராஜாஜியும் என பள்ளி விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார்.
கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க 15ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் மாணவரும் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை தலைவருமான நடிகர் சிவக்குமார், இணைத் தலைவர் செ.ம.வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு மேல் படிப்பு மேற்கொள்வதற்காக ஊக்கத்தொகை வழங்கினர்.
இந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: ராஜாஜி இறக்கும் வரை அவருடன் இணைபிரியாத நட்பை கொண்டு இருந்தவர் பெரியார். ராஜாஜி இறந்த போது துக்கம் தாளாமல் அழுதவர் பெரியார்.மகாத்மா காந்தி நேரில் வந்து சந்தித்து கள்ளுக்கடை போராட்டம் குறித்து புதுமையான வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என பெரியாரிடம் ஆலோசனை கேட்ட பின்பு பெண்மணிகளை கொண்டு போராட்டம் நடத்தலாம் என கூறியவர் பெரியார்.
அதன் பின் கள்ளுக்கடை மறியல் இந்தியா முழுவதும் பரவியது. ஆங்கிலேயரே அதனை தடுக்க முடியாமல் திணறினர். அப்படிப்பட்ட பெரியாரும் ராஜாஜியும் திருவள்ளுவர் கூறியது போன்ற நட்பை கொண்டிருந்தனர்.
அதேபோல கலைவாணர் ஈகைப் பண்பை தான் இறக்கும் வரை கொண்டிருந்தார்.
தான் இறக்கும் தருவாயிலும் தன்னை நாடி வந்த நாடக கலைஞருக்கு கூட தன் வீட்டில் இருந்த வெள்ளி சொம்பை எடுத்துக் கொடுத்தவர் கலைவாணர்.
தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போதும் தன்னை வேவு பார்க்க வந்த அதிகாரியிடம் கூட ஈகைப் பண்பை வெளி படுத்தியவர் கலைவாணர்.
அரசு பள்ளியில் படித்தால் தான் நல்லொழுக்கம் கிடைக்கும். அப்படித்தான் நானும் வளர்ந்தேன். இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.



