பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருவது சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளியில் படிக்கும் மைனர் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதிலும் வழிநடத்த வேண்டிய ஆசிரியராலேயே தொல்லைக்கு ஆளாகி கோவையில் ஒரு மாணவியும் அதனைத் தொடர்ந்து கரூரில் ஒரு மாணவியும் தங்கள் இன்னுயிரை துறந்துள்ளனர்.
குழந்தைகள் மீதும் மாணவிகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை தடுக்க காவல் துறை போக்சோ சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தாலும் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாக நீள்கிறது.
இதனைத் தடுக்க தமிழக அரசு முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கவனம் செலுத்துகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்பறையிலும் ஒவ்வொரு புத்தகத்தின் முகப்பிலும் புகார் செய்ய வேண்டிய எண், விழிப்புணர்வு வாசகம் இடம்பெறும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கால கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. விழிப்புணர்வோடு தைரியத்தை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோருக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு உள்ளது.
‘உங்கள் தந்தையாக, சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். பெண் குழந்தைகள் தற்கொலை செய்யக் கூடாது. அரசாங்கம் உள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டிய முக்கிய கடமையை பெற்றோரும் ஆசிரியர்களும்தான் நிறைவேற்ற வேண்டும்.



