விவசாயப் பயிர்கள் நன்கு செழித்து வளரவும் ஆரோக்கியமான சாகுபடியை நல்கவும் அதை புழு, பூச்சி, எலி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து காக்கவும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான உரம், யூரியா இன்றி கஷ்டப்படக்கூடாது என்பதை உணர்ந்து தமிழகத்துக்கு தேவையான உரம் மற்றும் யூரியாவை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இந்த கடிதத்தை பரிசீலித்த ஒன்றிய அரசு தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடின்றி தமிழக விவசாய மக்களுக்கு கிடைத்திட உரிய காலத்தில் குறைவின்றி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காரைக்கால் துறைமுகத்துக்கு வரவுள்ள 90 ஆயிரம் மெட்ரிக் டன் அப்படியே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி காக்கிநாடா துறைமுகத்துக்கு வரும் டிஏபி உரத்தில் பெரும் பங்கு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு உர நிறுவனங்களிலிருந்து உரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ள 27 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தில் இருந்து தமிழக மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை முறையாகப் பாதுகாத்து உரம் போட்டுச் செழிப்பான சாகுபடியை காண முடியும்.
விவசாய தேவை மற்றும் விவசாயிகளின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதற்கு விவசாய சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் கோரிக்கையை போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பது வரவேற்புக்குரியது என்று விவசாய சங்கத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



