இந்திய பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியின் முழுமை யான வளர்ச்சிக்கான மத்திய ஜவுளி மற்றும் அமைச்சர்களின் முயற்சிகளுக்கு இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலின் வளர்ச்சிக்கு இயந்திரமாக பருத்தி விளங்குகிறது. இது 6.5 மில்லியன் பருத்தி விவசாயிகள் உள்பட 105 மில்லியன் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.
பல்வேறு தனித்து வமான நிவாரண நடவடி க்கைகள், இந்திய ஜவுளி இறக்குமதி நாடுகளுடனான வரியில்லா ஒப்பந்தம், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பின் பிந்தைய காலத்தில் எழுந்த ஜவுளிக்கான அதிக தேவை ஆகியவை 2021-22-ம் ஆண்டில் ஜவுளித் தொழில் அதன் செயல்திறனை அடைந்து சாதிக்க வழிவகை செய்தது.
ஆனால், கடுமையான பருத்தி விலை உயர்வு, பருத்தி தட்டுப்பாடு காரணமாக தொழில்துறை சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. சீரற்ற வானிலை, இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய முறைகளின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக நாட்டின் பருத்தி உற்பத்தி நடப்பாண்டில் 315 லட்சம் பேல்களாக குறைந்துள்ளது.
இந்நிலையில் பருத்தி சார்ந்த அனைத்து தரப்பினரின் கூட்டத்தை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில் நடத்தினார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் த.ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (TEXPROCIL) தலைவர் மனோஜ்குமார் பட்டோடியா, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (SIMA) தலைவர் ரவிசாம் ஆகியோர் கோவையில் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த உலகளவில் சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும். இந்திய பருத்தி மற்றும் ஜவுளி தயாரிப்புகளை பிராண்டிங் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
விவசாய நிலம் முதல் தொழில் வரை பரிசோதனை வசதிகள் மற்றும் சுத்தமான மாசில்லாத பருத்தி உற்பத்தி விரைவில் இந்திய பருத்தி மற்றும் அதன் ஜவுளி தயாரிப்புகளை மற்ற சர்வதேச பருத்திக்கு இணையாக முத்திரை பதிக்க உதவும்.
உரம் மூட்டை கட்ட வண்ண HDPE பையை பயன்படுத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவானது, இந்திய பருத்தியில் இருக்கும் தீராத பிரச்சினையான வெள்ளை HDPE மாசுபாட்டினை தீர்க்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகும். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.
RoSCTL, RoDTEP, NTTM மற்றும் PM MITRAதிட்டங்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளால், தரமான பருத்திக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.
சரியான விதைகளைப் பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகள் ஆகியவற்றை பயன்படுத்துவது பருத்தி விவசாயிகளின் மகசூல் மற்றும் இலாப வரம்புகளை அதிகரிக்க உதவும்.
மத்திய விவசாயம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்கள் மட்டத்தில் இது போன்ற முதல் கூட்டம் மகத்தான ஊக்கத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



