fbpx
Homeபிற செய்திகள்கஜா புயலால் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களுக்கு இலவச வீடுகள்- 60-வது பிறந்தநாளை முன்னிட்டு பால் தினகரன்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களுக்கு இலவச வீடுகள்- 60-வது பிறந்தநாளை முன்னிட்டு பால் தினகரன் நல உதவி

காருண்யா பல்கலைக்கழக வேந்தரும், இயேசு அழைக்கிறார் ஊழியம் மற்றும் சீஷா சமூக தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் பால் தினகரன், நேற்று முன்தினம் (செப். 4) தமது 60-வது பிறந்தநாளை சென்னை, வானகரத்திலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர வளாகத்தில் கொண்டாடினார்.

கஜா புயலினால் வீடுகளை இழந்த புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 69 பயனாளிகளுக்கு சீஷாவினால் புதிதாக கட்டப்பட்ட வீடுகளை அதன் நிறுவனரும் அறங்காவலருமான டாக்டர் பால் தினகரன், இந்த விழாவின்போது ஒப்படைத்தார்.

டாக்டர் பால் தினகரனின் 60 ஆண்டு கால வாழ்க்கையை விவரிக்கும் சுயசரிதை நூலான “ஐ யம் நெவர் அலோன்” என்ற ஆங்கில புத்தகமும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் 60 ஜெப கோபுரங்களை ஸ்தாபிக்கும் திட்டத்தையும், குடும்பமாக தியானம் செய்தவதற்கும், சமாதானம், சுகம் அனுபவிக்கக்கூடியதும், பக்திக்குரிய விதத்தில் பொழுதுபோக்கக்கூடிய பூங்காவுடன் கூடிய பெதஸ்தா ஜெப நகரத்தை 200 ஏக்கரில் ஸ்தாபிப்பதற்கான திட்டத்தையும் டாக்டர் பால் தினகரன் தொடங்கி வைத்தார்.

60 ஆயிரம் சதுர அடி பரப்பில் இயேசு அழைக்கிறார் ஊழிய செயல்பாட்டு மையத்தை கட்டி, இந்த ஆண்டில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

அவரது குடும்பத்தினரான ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் தினகரன், சாமுவேல் மற்றும் ஷில்பா தினகரன், ஷேரன் ஏஞ்சல், ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் டாக்டர் பால் தினகரனுடனான தங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்களை பகிர்ந்தனர்.

யூடியூப்பில் 60 லட்சம் பேர் பார்த்த, 2022-ம் ஆண்டில் அதிக வரவேற்பு பெற்ற டாக்டர் பால் தினகரனின் ‘சீர்ப்படுத்துவார்’ என்ற பாடலை, முன்னணி கிறிஸ்தவ கலைஞர்கள் பாடினர்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளி லிருந்தும் 3000 விருந்தினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜாண் பர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆண்டோ ஆன்டணி, எஸ். ஞானதிரவியம், பி.வில்சன் ஆகியோரும், மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும், பேராயர் ஓமன் ஜார்ஜ், போதகர் சமண்டாராய், போதகர் மைக்கேல் ஹெரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு போதகர்களும், தென்னிந்திய மற்றும் வட இந்திய திருச்சபை பேராயர்கள் மற்றும் சமய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனியும், அகில இந்திய அசம்பிளீஸ் ஆப் காட் சபையின் கண்காணிப்பாளருமான போதகர் பால் தங்கையாவும் டாக்டர் பால் தினகரனை வாழ்த்தி பேசினர்.

உலக அசம்பிளீஸ் ஆப் காட் சபை தலைவரான போதகர் டி.மோகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆன்மீக தலைவர்கள் பிரார்த்தனை ஏறெடுத்தனர். இயேசு அழைக்கிறார், காருண்யா மற்றும் சீஷாவின் ஆதரவாளர்கள் பங்கு பெற்றனர்.

அருண் சாமுவேல், ராபர்ட் கிறிஸ்டோபர், டாக்டர் ஏ.எப்.பிண் டோ, டாக்டர் கிரேஸ் பிண்டோ உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் டாக்டர் பால் தினகரனின் பிறந்தநாள் பிரார்த்தனையையும், வெளியீட்டு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img