நீலகிரி மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் 11,139 குழந்தைகளுக்கு வளர்ச்சி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்குப் பின் 477 பேரின் விவரம் சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பணிபுரியும் பெண்களின் பேறுகால விடுப்பு ஒன்பது மாதங்களிலிருந்து ஒரு வருடமாக உயர்த்தி அதற்கான ஆணையினை வெளியிட்டார்.
போஷான் அபியான் திட்டத்தின் மூலம் எடை குறைவாக உள்ள கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி, எடை அதிகரிப்பதோடு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வர் 07.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும் எனவும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என அறிவித்தார்.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட முத்தோரை குழந்தைகள் மையத்தில், முதல்வர் 21.05.2022 அன்று 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இவர்களில் 3,808 கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கும், 7,331 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கும், RBSK மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 477 குழந்தைகளின் விவரம், சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 11,139 குழந்தைகளுக்கும் வளர்ச்சி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
பெட்டகம்
முகாமில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடைய ஏழ்மையான குழந்தைகளுக்கு ராகி -1 கிலோ, வெல்லத்தூள் -1 கிலோ, நெய் -ரு கிலோ, பேரிச்சம் பழம் – லு கிலோ, கடலைமிட்டாய் 200 கிராம், எள்ளுமிட்டாய் 200 கிராம், அவல் லு கிலோ, தேன் நெல்லி 12 எண்ணிக்கைகள், பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலை ரு கிலோ அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
“தக்க நேரத்தில் உயிர் காத்த திட்டம்”
‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தை மாசாணியின் தாயார் கூறியதாவது:
என் பெயர் காளியம்மாள். கணவர் பெயர் ரவிக்குமார். இருளர் பழங்குடியினராகிய நாங்கள் வெள்ளரிக்கம்பை என்ற கிராமத்தில் வசித்து வருகிறோம். எனது குழந்தையின் பெயர் மாசாணி.
எனது குழந்தைக்கு 1 வயது 4 மாதம் ஆகிறது. எனது குழந்தைக்கு எடை மற்றும் உயரம் எடுத்து பார்கையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. முதல்வரின் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து மேல் மருத்துவ சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு கடுமையான இரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டு, இரத்தம் செலுத்தப்பட்டது. அடிக்கடி சோர்வுடன் காணப்பட்ட எனது குழந்தையிடம் தற்போது மாற்றம் உள்ளது. குழந்தைக்கு தக்க நேரத்தில் பரிசோதனை செய்யப்படாமல் இருந்திருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனது குழந்தை இன்று நல்ல நிலையில் இருக்க உறுதுணையாக இருந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
“குழந்தையின் எடை கூடியது
சுறுசுறுப்பு அதிகரித்தது”
‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தை பூர்விக்-கின் தாயார் கூறியதாவது:
எனது பெயர் லீலாவதி. கணவர் பெயர் மோகன் லோகேஷ். உதகை முக்கோணம் காளான் பேக்டரி பகுதியில் வசித்து வருகிறோம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பூர்விக்- கிற்கு தற்போது 2 வயது 4 மாதம் ஆகிறது. குழந்தையின் பிறப்பு எடை 1.800 கிலோ இருந்தது.
முக்கோணம் அங்கன்வாடியில் குழந்தைக்கு சத்துமாவு, ராகிமாவு, வெல்லம் ஆகிய உணவு பொருட்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. அதனை வாங்கி வந்து குழந்தைக்கு அளித்து வந்தேன்.
இந்நிலையில், தமிழக அரசின் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள முகாமிற்கு, குழந்தையை அழைத்து வருமாறு அங்கன்வாடி பணியாளர் தெரிவித்து, என்னையும் குழந்தையையும் அழைத்து சென்றார்கள். அதன்பின் எனது குழந்தையை உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு, மேல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு முன்பு குழந்தையின் எடை 8.900 கிலோ கிராமாக இருந்தது தற்போது 9.600 கிலோ கிராமாக உயர்ந்துள்ளது. முன்பிருந்த நிலையை விட தற்போது எனது குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை கொண்டு வந்து, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகள் மூலம் குழந்தையின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த உதவிய முதல்வருக்கு எனது சார்பாகவும், குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் இதுபோன்ற சிறந்த திட்டத்தினை கொண்டு வந்து மிகச் சிறப்பாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தியமைக்காக, மாவட்ட பெற்றோர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.



