fbpx
Homeதலையங்கம்இளைஞர்களே, வன்முறை போராட்டம் வேண்டாம்!

இளைஞர்களே, வன்முறை போராட்டம் வேண்டாம்!

தீ பாதை (அக்னி பாத்) என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத ராணுவக் கூலித் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

இந்தத் திட்டத்திற்கு எதிராக பீகார், ராஜஸ்தானில் இளைஞர்களால் போராட்டங்கள் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மக்கள் நடுவே பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து, வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும் வேலை கொடுத்தால் எஞ்சிய நாளில் என்ன செய்வது என்று கேட்டு இந்திய ராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நான்கு ஆண்டு ராணுவப்பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்தவிதச் சலுகையும் இருக்காது.

சேனைக்கு ஆள் சேர்ப்பதுபோல் சேர்த்து, அவர்களில் சிறந்தவர்களில் 25 விழுக்காட்டு பேர்களை மட்டும் நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருப்பதோடு, பெரும்பாலானவர்களைக் கழித்துக்கட்டும் நீட் போன்ற ஒரு தகுதி தேர்வு முறையை முன்னெடுக்கவும் ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய ராணுவத்தில் சேரத் தங்களைத் தயார்ப டுத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அவர்கள் ராஜஸ்தான், பீகாரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். ரயில்களுக்கு தீ வைக்கப்படுகிறது. ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறி உள்ளன, செகந்திராபாத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பலர் காயமடைந்துள்ளனர். அறவழியில் போராடுவதை விட்டுவிட்டு, வன்முறையில் இளைஞர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

பணிப் பாதுகாப்பும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் எதிர்காலம் என்னாவது? என்று கேள்வி எழுப்பும் போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசு கூறும் பதில் என்ன? 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியேறும் வீரர்களுக்கு காவல்துறை, ஊர்க்காவல் படையில் சேர முன்னுரிமை தரப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.

இந்த திட்டம் குறித்து நல்லதே என்றும் சரியாகப்படவில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை முன்னாள் ராணுவ அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் இத் திட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் ஒன்றிய அரசு இடமளிக்காது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அக்னி பாத் திட்டத்தில் சேருபவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்ற சந்தேகமே இளைஞர்களின் ஆவேசத்திற்கு காரணமாக உள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது.
விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்க அறிவித்துள்ளார்.

ஆகவே வயது வரம்பை 23 ஆக உயர்த்தியது போல, கூடுதல் சலுகைகளை அறிவித்து ராணுவத்தில் சேரத்துடிக்கும் இளைஞர்களை ஈர்க்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

இளைஞர்களே, வன்முறை ஒருபோதும் தீர்வு தராது. ஓராண்டுக்கும் மேலாக அமைதியாகப் போராடியதால் தான் விவசாயிகள் வெற்றி கண்டார்கள்.

நாட்டின் நலன் கருதி வன்முறைப் போராட்டத்தை நிறுத்துங்கள்!

படிக்க வேண்டும்

spot_img