டெல்லியில் நேற்று நடந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும் நமது பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கொரோனா தடுப்பு, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம், சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
அப்போது மோடி பேசுகையில், ‘ரஷ்யா – இந்தியா இடையே உறவு வலுவடைந்து வருகிறது. இந்த உறவு உண்மையானது, தனித்துவமானது, இருநாட்டு நலனை நோக்கமாக கொண்டது’ என்றார்.
அதிபர் புதின் பேசும்போது, ‘நாங்கள் இந்தியாவை பெரிய சக்தியாகவும் நம்பகமான நீண்ட கால நண்பராகவும் கருதுகிறோம். ராணுவ தொழில்நுட்பத் துறையில் பெரிதும் ஒத்துழைக் கிறோம். இந்தியாவில் அதிக முதலீடு செய்வோம்‘ என்றார்.
இருநாட்டின் உறவில் எந்த விரிசலும் இல்லை.
இந்த உச்சி மாநாடு மூலம் உறவு வலுப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருக்கும் தருணத்திலும் மோடி & புதின் சந்திப்பு, அதையெல்லாம் பொருட்படுத்தாது நீண்ட காலமாக இருந்து வரும் நல்லுறவை ஆழப் படுத்துவதாகவே அமைந்தது.
எஸ்-400 அதிநவீன எவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. தடைவிதிக்கலாம் என்ற அச்சுறுத்தலையும் மீறி இந்தியா தன் உரிமையை நிலைநாட்டியதால் ரஷ்யாவின் ஆதரவுக் கரம் நம் பக்கம் நீண்டது.
அதே சமயம் அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களை இந்தியா வாங்கியது. அமெரிக்காவையும ரஷ்யாவையும் சமமாக பாவித்து அரவணைக்கும் இந்தியாவின் பாரபட்சமற்ற கொள்கைக்கு மீண்டும் ஓர் வெற்றி கிடைத்திருக்கிறது.
மேலும் புதின் வருகையையொட்டி இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் ஏகே 203 அதிநவீன துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
7 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகளை தயாரிக்கும் இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்தும் என்பதால் அதனை வரப்பிரசாதமாக கருதலாம். ஆப்கான் பிரச்சினையில் இருநாட்டு உறவில் சற்றே விரிசல் ஏற்பட்டிருந்தது.
அது புதின் – மோடி சந்திப்பால் இப்போது சீராகி விட்டது. மொத்தத்தில் புதினின் இந்திய பயணம் நேர்மறை பலன்களையே தந்துள்ளது. அதோடு நம் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கும், நாட்டின் ஸ்திர தன்மையை சீர்குலைக்க பார்க்கும் எதிரிகளுக்கோ ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது!



