விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றில் நீர் இருப்புத் தன்மையை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் சி.பழனி.
விழுப்பரம் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தங்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமைவகித்து, ஆட்சியர் பழனி பேசியதாவது: மாவட் டத்தில் குடிநீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகள் குறித்து அலுவலர்கள் முழு தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏரிகள், குளங் கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ள பகுதிகளைக் கண்ட றிந்து, நீர் இருப்புத்தன்மை குறித்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர்த் தேவைப்படும் பட்சத்தில் நீர்வளத்துறை மூலம் சாத்தனூர் மற்றும் வீடூர் அணைகளிலிருந்து குடிநீர் பெறுவதற்கான சாத்தியங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் தற்போது அனைத்துக் கிராமங்கள், நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தங்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மின்சாரத்துறை சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சீரான முறையில் தடையின்றி பொதுமக்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
ஊராட்சிப் பகுதிகளிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் மின் மோட்டார்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண் டும்.ஊராட்சிப்பகுதிகளில் தேவை யான குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில், வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி கோருதல் உள்ளிட்ட புகார் கள் வரும்பட்சத்தில், அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சென்று, குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாத வண்ணமாக இருப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மோகன், உதவிச் செயற் பொறியாளர் சிவசங்கரன், தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் லட்சுமி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ஹெச்.ரமேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்



