தமிழக – கேரளா எல்லையான வாளையாறு பகுதி வாளையாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது பணம் கொடுக்க வந்த ஓட்டுநர்கள்.
கோவை அடுத்த வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது வழக்கமாக லஞ்சம் கொடுக்க வந்த ஓட்டுநர்களிடம் ஆவணங்கள் சரியாக இருந்தால் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி அதிகாரிகள் அனுப்பிய வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.
தமிழக – கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் கேரளா ஆர்.டி.ஓ சோதனை சாவடியும், எட்டிமடை பகுதியில் தமிழக ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியும் செயல்பட்டு வருகிறது.இந்த சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் சுமார் ரூ.300 முதல் ரூ.1,000 வரை லஞ்சமாக அங்குள்ள அதிகாரிகள் வாங்கிக்கொண்டு மாநில எல்லைகளை கடக்க அனுமதி வழங்குகின்றனர் என கூறப்படுகின்றது.
அவ்வப்போது தமிழக மற்றும் கேரளா சோதனைச் சாவடிகளில் அந்தந்த மாநில லஞ்ச வழிப்பு போலீசார் திடிரென ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவும் செய்து வருகின்றனர். ஆனாலும் சிறிது நாட்களிலேயே மீண்டும் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூல் செய்யப்பட்டு வருவதாக தகவல் வாயிலாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சனிக்கிழமை வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் திடிரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மேஜையில் லஞ்சமாக பெறப்பட்ட ரூ.10,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பணியில் இருந்த அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கோவை, உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து கேரளா செல்ல அனுமதி பெற வந்த வாகன ஓட்டிகள் வழக்கமான முறையில் தங்கள் மாமூல் பணமான ரூ.300, 500, 1000 என கொடுத்தனர். அப்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர் எதற்காக கொடுக்கிறீர்கள் என்று கேட்ட போது, வழக்கமாக கேட்பார்கள் அந்த கட்டணம் தான் எனக் கூறியுள்ளனர்.
அப்போது ஆவணங்கள் சரியாக இருந்தால் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம், நீங்கள் உள்ளே செல்லலாம் எனக்கூறி பணத்துடன் திருப்பி அனுப்பினர். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு கேரளா திரை நட்சத்திரங்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.