fbpx
Homeபிற செய்திகள்வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு கட்டாயமாகட்டும்!

வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு கட்டாயமாகட்டும்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ் குமார், டெல்லியில் கடந்த வாரம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய அறிவுறுத்தல்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருந்தார். அவரது கருத்துகள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஒரு தெளிவற்ற போக்குதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 2015-ல் பிரம்மா பதவி வகித்தபோதுதான் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி தொடங்கியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தது.

இதனடிப்படையில் 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.

அதேநேரத்தில் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைத்தும் வந்தனர். உச்சநீதிமன்ற வழக்குகளிலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.

இந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன. இது கள்ள ஓட்டு போடுவதை முற்றிலுமாகத் தடுக்கும் என்ற நம்பிக்கையையும் உருவாக்கி இருக்கிறது.

வங்கிகள், வருமான வரிக்கான பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து அரசின் சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டை இணைப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றத் தடைகள் ஏதுமிருந்தால் அதனை நீக்கும் நடவடிக்கையை எடுப்பதோடு, வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் அடையாள அட்டையையும் இணைப்பதற்கான முயற்சியை மத்திய அரசும் தலைமை தேர்தல் ஆணையமும் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும்.

இந்த இரு அடையாள அட்டைகளையும் இணைப்பதை யாரும் எதிர்த்துப் போராடப் போவதில்லை. நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும்?

படிக்க வேண்டும்

spot_img