fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் 36,208 மாணவர்களுக்கு சிற்றுண்டி

‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் 36,208 மாணவர்களுக்கு சிற்றுண்டி

விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என சேர்த்து 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் 36,028 மாணவ, மாணவிகள் ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ மூலம் பயன்பெறுகின்றனர்.

கிராம, நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3884 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, இத்திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி முதல்வர், நாகப்பட்டினம் மாவட்டத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை 25.08.2023 அன்று தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு, ஊரகப்பகுதிகளில் 686 அரசு தொடக்க பள்ளிகளிலும், நகர்புறங்களில் 13 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் என மொத்தம் 699 அரசு தொடக்கப்பள்ளிகளில் 32,917 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என சேர்த்து 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் 36,028 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர்.

முதல்வர் கூற்றுப்படி, பசிப்பிணி நீங்கிட்டால், மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகைப் பதிவும் இருக்கும்.

தமிழ்நாட்டின் கல்வி விகிதமும் அதிகம் ஆகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள். படிப்புடன் விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றிலும் சாதனை படைக்கக் கூடியவர்களாக நிச்சயம் திகழ்வார்கள். இப்படி எத்தனையோ நன்மைகளை நம்முடைய மாநிலம் இந்தத் திட்டத்தால் அடையப் போகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவிகள் தெரிவித்ததாவது:

‘சுவையான உணவு’

என் பெயர் ஆனந்தி. பாலவனத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். தந்தை கூலி வேலை செய்கிறார். தாய் விவசாயக் கூலி வேலை செய்கிறார். தினமும் பள்ளிக்கு வரும்போது, என் பெற்றோர் வேலைக்கு செல்வதன் காரணமாக, காலை உணவை சரிவர தயார் செய்து கொடுக்காமல் சென்று விடுவார்.

நானும் வீட்டில் இருந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவேன். சில நேரங்களில் காலை உணவை சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வந்துள்ளேன். இந்த நிலையில் முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உணவு வழங்கி வருகிறார்.

இதில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. காலை உணவினால் மிகவும் உற்சாகம், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் இருக்கிறது. காலை உணவு அளித்த முதல்வருக்கு நன்றி என்றார்.

‘நன்றாக படிப்பேன்’
எனது பெயர் தாரணி. ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறேன். தந்தை ஓட்டுனர். தாய் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.

பள்ளிக்கு வருவதால் பெரும்பாலும் காலை வேளைகளில் இரவு செய்த உணவையும், சில சமயங்களில் வீட்டில் உள்ளதை மட்டுமே அருந்தியும் வந்திருக்கிறேன்.

இப்போது எனக்கு காலை உணவு சூடா கவும், சுவையாகவும் கிடைக்கிறது. நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்ப்பேன்.

மாணவ, மாணவிகள் சிறப்பான கல்வியை தொடர்ந்து பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் முதல்வருக்கு நன்றி என்றார்.

படிக்க வேண்டும்

spot_img