fbpx
Homeபிற செய்திகள்வால்பாறை கோடை விழாவில் ரூ.30.30 கோடியில் 4 திட்டப்பணிக்கு அடிக்கல்- ரூ.13.55 கோடியிலான 7 பணிகள்...

வால்பாறை கோடை விழாவில் ரூ.30.30 கோடியில் 4 திட்டப்பணிக்கு அடிக்கல்- ரூ.13.55 கோடியிலான 7 பணிகள் துவக்கம்

வால்பாறை கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.13.55 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 பணிகளை தொடங்கி வைத்து, 111 பயனாளிகளுக்கு ரூ.39.11லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.

கோவை மாவட்டம், வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 28-ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நிறைவு விழா நடந்தது.
விழாவில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பேசியதாவது:

அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விழாக்களையும் நடத்தும் அரசாக திகழ்கிறது. இனிமேல் வால்பாறை கோடைவிழா ஆண்டுதோறும் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை இந்த இரண்டு ஆண்டுகளிலே நிறைவேற்றி உள்ளது.

வால்பாறை நகராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் உள்பட கோவை மாவட்டத்திற்கு அனைத்து வளர்ச்சித்திட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம், TNTECCITY திட்டம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம், முதல்வரால் தொடங்கப்படவுள்ளது.

அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.350 கோடி நிதியினை வழங்கியுள்ளார்.

காலை உணவுத் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். இத்திட்டத்திற்கு இந்நிதியாண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டக் கூடிய ‘நான் முதல்வன்’ திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தஆண்டு கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இல்லம்தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வால்பாறை பகுதியில் புறநகர்ப் பேருந்துகள்தான் அதிகமாக வருகின்றன. சாதாரண நகரப்பேருந்துகள் குறைவாகவே வருவதால் நகரப்பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பது இப்பகுதியில் செயல்படுத்தமுடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பகுதி மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

வால்பாறை நகராட்சியில் ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.13.55 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 பணிகளை தொடங்கி வைத்து, வருவாய்த்துறை சார்பில் 76 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 13 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், 11 பயனாளிகளுக்கு ரூ.5.55 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5400 மதிப்பிலான காதொலி கருவி மற்றும் ஊன்றுகோலையும், மகளிர் திட்டம் சார்பில் 6 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.33.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.39.11லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.வால்பாறை கோடைவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஆன்லைன் புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா, வால்பாறை நகர்மன்றத் தலைவர் செ.அழகுசுந்தரவள்ளி, நகராட்சி ஆணையாளர் (பொ) செ.வெங்கடாசலம், நகர்மன்ற துணைத் தலைவர் ச.செந்தில்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் கோழிக்கடை கணேசன், வால்பாறை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img