மக்களுக்காக புதிய தொழில்நுட் பங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னிலையில் உள்ளது என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 102-வது நிறுவன தின விழா, தூத்துக்குடியில் நடந்தது.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சேலம் மாவட்டம் பேலூரில் வங்கியின் 545-வது கிளையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கும் முறையை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழிசை சௌந்தர ராஜன் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1921-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த வங்கி சாமானியர்களுக்கு உதவி வருகிறது.
வங்கிகள் அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாகச் செயல் பட்டு வருகின்றன. மக்களுக்காக புதிய தொழில் நுட்பங்களை செயல் படுத்துவதில் தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி முன்னிலையில் உள்ளது என்றார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். வங்கியின் முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் இயக்குநர் விக்ரமன் மனைவி லட்சுமி பிரபா விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொது மேலாளர் டி.இன்பமணி, துணைப் பொது மேலாளர் பி.ஆர். அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நவம்பர் 9- தேதி தூத்துக்குடியில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
பிரபல தொழில் அதிபர் இதயம் குழும நிறுவனர் வி.ஆர்.முத்து, விருதுநகர் சரஸ் ஏஜன்சீஸ் மதியழகன், எஸ்.பி.கே.அன் கோ. எஸ்.கருப்பசாமி, தூத்துக்குடி வேல வன் குழுமங்களின் தலைவர் ஏ.தங்கவேல் நாடார், ஸ்ரீ ஜெயஜோதி அன் கோ கே.கோகுல் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



