“ராக்கிங்”(Ragging) எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும், கொடுமைகளையும் தாங்கிய சொல். ஜூனியர் மாணவர் களுக்கு, சீனியர் மாணவர்களால் இழைக்கப்படும் உளவியல் ரீதியான கொடுமையே இந்த “ராக்கிங்” என்றழைக்கப்படும் “பகடிவதை”.
ஆயிரம் கனவுகளுடன் கல்லூரிக்குள் புதிதாக நுழையும் ஜூனியர் மாணவர்களுக்கு, ஏற்கெனவே படித்துக் கொண் டிருக்கும் சீனியர் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் செய்யும் துன் புறுத்தல் சில நேரங்களில் அவர்களைத் தற்கொலைக்குள் தள்ளி விடுகிறது.
நாட்டையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்று விட முடியாது. சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடும், இங்கு நாங்கள் தான் மூத்தவர்கள் என்ற அகங்காரமுமே (ணிரீஷீ) “ராக்கிங்” கொடுமை நடைபெறுவதற்கான முக்கிய காரணம்.
கல்லூரிகளில், புதிதாக சேர்ந்த மாணவர்கள் அல்லது மாணவிகளிடம் சீனியர் மாணவர்கள் பெயர் கேட்பது, அவர்களைப் பாடச் சொல்வது, ஆடச் சொல்வது என்று தொடங்கிய பொழுதுபோக்கு நிகழ்வு, நாட்கள் செல்லச் செல்ல, சீனியர் மாணவர்களின் அரக்க குணத்தைத் கொப்பளித்து, உமிழத் தொடங்குகிது. மனித உரிமை மீறல் எக்காளமிடுகிறது.
ஆம். சீனியர்கள் சொல்வ தற்கு ஜூனியர்கள் பணியாத நேரங்களில், சக சீனியர் மாணவர்கள் மத்தியில் அவமா னமும், கேலிக் கிண்டலுக்கு உள்ளாகும் சூழல் ஏற்படும் போது, ஜூனியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி அவமானப்படுத்துவது, அடித்து உதைப்பது என உளவியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் புதிய மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதைக் கடந்த செல்லும் ஜூனியர் மாணவர்கள், சீனியர்களானதும் அடுத்த ஆண்டு தாங்கள் அனுபவித்த கொடுமையை, ஜூனியர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதால், “ராக்கிங்” கொடுமை தொடர் கதையாகி விடுகிறது. எல்லா சீனியர் மாணவர்களும், ஜூனியர் மாணவர்களிடம் இப்படி நடந்து கொள்வதில்லை. எல்லா ஜூனியர் மாணவர்களும் “ராக்கிங்” கொடுமைக்கு உள்ளாவதில்லை.
சொல்லப்போனால், இது மாமியார் -மருமகள் உறவுக் குள் ஏற்படும் பிரச்சினை போன்றதுதான். “திருமணமாகி தனது வீட்டுக்கு வாழ வரும் மருமகள்களை, சில மாமியார்கள் அல்லது நாத்தனார்கள், தாங்கள் தான் பெரியவர்கள் என “கெத்து” காட்டிக் கொண்டு வாழ வந்த மருமகளை வேறுமாதிரியாக நடத்துவார்கள்”, அதுபோன்ற கதைதான் இதுவும்.
மருமகளை, தனது இன்னொரு மகள் என்று கருதினாலும், ஜூனியர் மாணவர்கள் தங்களுடைய சகோதர, சகோதரிகள் என சீனியர்கள் கருதினாலும் எந்தவித பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. மருமகள் மற்றும் ஜூனியர் மாணவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்பது தான் இங்கு பிரச்சினையே.
இது குடும்பத்திலும், மாணவர்கள் மத்தியில் மட்டு மல்ல. பணிபுரியும் அனைத்து இடங்களிலும் உள்ளது இப்பிரச்சினை.
அங்கு “ராக்கிங்” மற்றும் புதியவர்களை பணியச் செய்யும் வடிவங்கள் மட்டும் வெவ்வேறானவை. சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களின் பெயரைக் கேட்பதே “ராக்கிங்” என்கிறது, சட்டம்.
இதற்குமேல் கூற வேண்டுமா என்ன? “சார்”, “மேடம்” என அழைக்கச் சொல்வது, பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்லச் சொல்வது, பணம் பறிப்பது, விருந்து (Treat) வைக்கச் சொல்வது, ஆடச்சொல்வது, பாடச்சொல்வது, மறுத்தால் மிரட்டுவது, தகாத வார்த்தைகளைப் பேசுவது, அடித்து, உதைப்பது போன்றவையெல்லாம் நடைபெற்றால், தண்டனை எப்படி இருக்கும்? என்பதை நன்றாகவே உணர்ந்து விட முடியும்.
உச்சநீதிமன்ற ஆணையின் படி, இந்திய அரசின் மனிதவளத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி, அனைத்து கல்வி நிறுவனங் களிலும், ராக்கிங் தடுப்புக் குழுக்கள் அமைத்து, செயல்படுத் தப்பட்டு வருகின்றன.
கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ “ராக்கிங்” நடைபெற்றதாகப் புகார் பெற்றால், முதல்வர் அல்லது துணைவேந்தர் அல்லது பதிவாளர் தலைமையில், பேராசிரியர்கள், காவல்துறை யினர், ஊடக வியலாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட, ராக்கிங் தடுப் புக்குழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வழக்குப்பதிவு, தண்டனை போன்றவை யெல்லாம் அடுத்தடுத்து மேற்கொள்ளப் படும் சட்டரீதியான நடவடிக் கைகள். “போக்ஸோ” புகார்போல “ராக்கிங்” புகாரும் உடனடி நடவடிக்கைக்கு உரியது. தயவு தாட்சண்யமே கிடையாது. தண்டனை உறுதி. எதிர்காலமே சூனியமாகி விடும்.
ஒருவரை உளவியல் ரீதியாக சிறு பாதிப்புக்கு ஏற்படுத்துவதே, தண்டனைக்குரிய குற்றம் என்றால், பிறர் மனம் புண்படும்படி நாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனை எப்படி இருக்கும்? என்பதற்கு “ராக்கிங்” தடுப்புச் சட்டமே மிகச் சிறந்த சான்று.
கல்வி நிறுவனங்களில் “ராக்கிங்” கொடுமை இன்று பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. “2021-ம் ஆண்டு நாடு முழுவதும் இருந்து 551 “ராக்கிங்” புகார்கள் எழுந் ததில், அவற்றில் 35.1 சதவீதம் சாதாரண புகார்களும், 4.1 சதவீதம் கடுமையாக நிகழ் வுகளும் அறங்கேறியுள்ளன” என்கிறது, பல்கலைக்கழக மானி யக்குழுவின் ராக்கிங் தடுப்பு மையத்தின் புள்ளிவிவரம்.
தமிழ்நாட்டில் கட்டுப் பாட்டிற்குள் இருப்பதற்கு, இந்தியாவிலேயே முதல்முறை யாக “ராக்கிங்” கொடுமைக்கு எதிராக சட்டம் (1997) இயற்றிய மாநிலம் தமிழ்நாடு என்பது பெருமைக்குரியது. கல்வி நிறுவனங்களில் “ராக்கிங்” கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு, தகவல் தொழில்நுட்பத்தின் வருகையான செல்போன்களில், மாணவர்கள் நேரத்தைச் செலவி டுவதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
கல்வி நிறுவனங்களில் “ராக்கிங்” கொடுமை தலை விரித்தாடிய தருணங்களில், செல்போன்கள் பயன்பாடு மிகக்குறைவு. பொழுது போக் குக்காக மாணவர்கள், சக மாணவர்களோடு நேரம் செல விட்டது அதிகம். அத்தகைய சூழல்களில் “ராக்கிங்” கொடுமை தொடர்கதையாக இருந்தது. ஆனால் இன்றோ ஒட்டுமொத்த சமூகத்தையும் தனக்குள் மூழ்கச் செய்து, சிற்றின்பத்தை அள்ளித் தருகின்றன, செல்போன்கள். சொல்போன்களின் பொழுது போக்கு பாதாளத்திற்குள் விழுந்த நமக்கு, மற்றவர்களுடன் செலவிட ஏது நேரம்? என்பது கவனிக்கத்தது.
செல்போன்களோடு மூலை, முடுக்களுக்குள் தஞ்சம் அடைந்தபிறகு, நேரம் போதா மல், அடுத்த நாளிடம் இருந்து சில மணி நேரங்களைக் கடன் பெற தேவை ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் பிறர் மனதைப் புண்படுத்தும், “ராக்கிங்” போன்ற கொடுமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இந்நிலையில், ஆகஸ்டு 12-ம் தேதியை “ராக்கிங்” ஒழிப்பு தினமாகக் கடைபிடிப்பதுடன், ஆகஸ்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை “ராக்கிங்” ஒழிப்பு வாரம் டைபிடிக்கவும், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்த ரவிட்டுள்ளது, பல்கலைக்கழக மானியக்குழு. இதன்மூலம் “ராக்கிங்” கொடுமை இல்லாத சூழல் கல்வி நிறுவனங்களில் உருவாக அனைவரும் உறுதி யேற்போம்!
கட்டுரையாளர்:
முனைவர் த.சத்தியசீலன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ இராமகிருஷ்ணாகலை அறிவியல் கல்லூரி,
நவஇந்தியா,
கோவை – 641 006.