திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான சு.முத்து சாமி தெரிவித்துள்ளார்.
மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
புதிதாகப் பொறுப் பேற்றுள்ள ஆட்சியைப் பின்னணி அரசியல் மூலமாகவோ அல்லது குறுக்கு வழியிலோ கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஒருபோதும் ஈடுபடாது என்பதை நம்முடைய தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், விரைவில் தேர்தல் வரும்; அதில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார்.
திமுகவைப் போல ஒரு மாபெரும் வெற்றியையோ அல்லது முழுமையான பின்னடைவையோ சந்தித்த கட்சி வேறொன்றும் இல்லை என்பதைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொண்டர்கள் தங்கள் அயராத உழைப்பால் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்.
காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பல மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். ஆனால், மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்கள் இந்தியாவின் பிற மாநில முதலமைச்சர்களைக் கவர்ந்து, அவர்களும் தங்கள் மாநிலங்களில் இதைப் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளன.ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆட்சிக் காலத்தில் 85 முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலன் கருதி, தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை நடப்பு அரசு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.தேர்தல் முடிவுகளைக் கொண்டு திமுக வீழ்ந்துவிட்டதாகக் கூற முடியாது. பொதுவாக ஒரு கட்சி சரிவைச் சந்தித்தால் அதன் தலைமை அலுவலகம் வெறிச்சோடிப் போய்விடும். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைவர்களும் தொண் டர்களும் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதன் மூலம் திமுக முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், நெசவாளர் அணித் தலைவர் எஸ்.எல்.டி.பி சச்சிதானந்தம், மாணவர் அணிச் செயலாளர் வீரமணி மற்றும் மொடக் குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் குணசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



