திருமூர்த்தி நகர் கிராமத்தில் அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் மழை வேண்டி சிறப்புப் பூஜை மற்றும் பிரார்த்தனை நடந்தது.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமை உடுமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் கோயிலில் திரண்டு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து விமரிசையாக வழிபடுவர்.
பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், விவசாயிகளின் விளை நிலங்கள் வறண்டு கிடப்பதால் வேதனையில் வாடுவதும் தொடர்கிறது.
இதிலிருந்து விடுபட மழை ஒன்றே தீர்வு என்பதால், மக்கள் அவதியை போக்க மழை பொழிய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதை தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, தளி தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் மழை வேண்டி பொங்கல் வைத்தும் அன்னதானம் செய்தும் மழை கடவுள் வருணனை வேண்டி “வருண ஜெபம்”, சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை மகத்துவ மைய மேலாளர் கு. ரகோத்துமன் தலைமை தாங்கினார்.