சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தில், முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் மொத்தம் 40 கல்லூரிகளிலிருந்து 3257 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1000 வீதம் வருடத்திற்கு ரூ.3,90,84,000 (ரூபாய் மூன்று கோடியே தொண்ணூறு லட்சத்து எண்பத்து நான்காயிரம் மட்டும்) அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக 68 கல்லூரிகளிலிருந்து 3091 முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
‘எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு’
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டதில் கூடுதலாக உதவி பெறலாம்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தாவது:
பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும்,பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக புதுமைப் பெண் என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களுக்கு, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வழியாக மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் -14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டம் 05.09.2022 அன்று முதல்வர் சென்னையிலும்,அவரது ஆணைக்கிணங்க செய்தித்துறை அமைச்சர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆகியோரது தலைமையில் திருப்பூர் மாவட்டத்திலும் துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் மொத்தம் 40 கல்லூரிகளிலிருந்து 3257 மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1000 வீதம் வருடத்திற்கு ரூபாய் 3,90,84,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 68 கல்லூரிகளிலிருந்து 3091 முதலாம் ஆண்டு பயிலும் மாணவி களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாணவிகளின் அவர்களின் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித் துள்ளனர். கல்வித் துறை மற்றும் வங்கியிலிருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
“தடையின்றி கல்வி”
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகையை பெற்ற ப.தீபா தெரிவித்ததாவது: திருப்பூர் திம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன்.
பெற்றோர் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறேன். உயர்கல்வி படிக்க வேண்டும், என்பதற்காக ய பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.
அரசு பள்ளியில்தான் படித்தேன், தேர்வுக் கட்டணம், புத்தகம் வாங்கும் செலவு, உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டு வந்தேன்.
இந்நிலையில் முதல்வர் புதுமைப் பெண்கள் திட்டத்தை அறிவித்தார். முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அன்றே என்னுடைய வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரப்பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வருகிறது. இதனால் என்னுடைய உயர்கல்வி படிப்பை தடையின்றி தொடரமுடிகிறது. என் குடும்பத்தார் சார்பிலும், மாணவிகளின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“சிரமம் தணிந்தது”
எம்.தனலட்சுமி தெரிவித்ததாவது:
திருப்பூர் மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில்வசித்து வருகிறேன். எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
தாய், தந்தையர் பனியன் கம்பனியில் கூலி வேலை செய்து வருகின்றனர். குடும்ப செலவுகளுடன், படிப்பிற்கான செலவுகளையும் மிக சிரமப்பட்டு சமாளித்து வந்தோம்.
முதல்வர் புதுமைப் பெண்கள் திட்டத்தை தொடங்கி வைத்த, அன்றே என்னுடைய வங்கி கணக்கில் ரூபாய் 1000 வந்துள்ளதாக குறுஞ்செய்தி வரப்பெற்றது. கல்லூரி படிப்பு செலவிற்கு இத்தொகை பேரூதவியாக இருக்கும்.
எங்களைப்போன்ற ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்வியை படிப்பதற்கு வழிவகை செய்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
வெளியீடு:
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.