டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பான டாலர் அறக்கட்டளை திருப்பூரில் புற்றுநோய் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு ரூ.25 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
திருப்பூரில் செயல்படும் இந்த மருத்துவமனை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், திருப்பூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் ரோட்டரி மற்றும் பொது நல் வாழ்வு அறக்கட்டளை திருப்பூர் ஆகியவற்றின் ஆதரவில் இயங்குகிறது. இந்த மருத்துவமனையில் புற்று நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திட்டப்பணி
பொதுவாகவே சமூக நல்வாழ்வு திட்டப்பணிகளுக்கு டாலர் நிறுவனம் தாமாக முன்வந்து ஆதரவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் பொது நல்வாழ்வு அறக்கட்டளை ஆகியவற்றுடன் தமிழக அரசு இணைந்து புற்று நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் செயல்திட்டத்தை அளிப்பதற்காக நவீன வசதிகளை உருவாக்கி வருகிறது.
மக்கள் நல் வாழ்வுக்கான இத்திட்டத்தில் டாலர் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக, டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பினய் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுகுவதில் டாலர் நிறுவனம் பொதுவாகவே முன்னணியில் திகழ்கிறது. மருத்துவமனையின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும், மிகச் சிறப்பான சிகிச்சை மற்றும் சேவையை நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.



