Homeபிற செய்திகள்அரசு போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலத்தில் முதல் பெண் கண்டக்டராக துளசி நியமனம்

அரசு போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலத்தில் முதல் பெண் கண்டக்டராக துளசி நியமனம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கடலூர் மண்டலத்தில் முதல் பெண் கண்டக்டராக துளசி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நீண்டநாள் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைந்தார்.
நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கோவையில் திருநங்கை வினோதி கண்டக்டராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் கடலூர் மண்டலத் தில் இதுவரை பெண் கண்டக்டர்கள் யாரும் பணியில் இல்லை. தற்போது முதல் முறையாக பண்ருட்டி திருமலைநகர் எல்.என்.புரத்தை சேர்ந்த செந்தில்முருகன் மனைவி துளசி (வயது 36) என்பவர் கண்டக்டராக பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார். 4 நாட்கள் பயிற்சி முடித்த அவர், நேற்று முதல் கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் தாழ்தள பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
ஆண்களை போல் சுறு, சுறுப்பாக பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த அவரிடம் இது பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது:-
நான் வேலை இல்லாமல் இருந்தேன். அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டக்டர் உரிமம் பெற்று இருந்தேன். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் பெண் கண்டக்டர்கள் நியமனம் செய்தார்கள். ஆனால் கடலூரில் நியமிக்காமல் இருந்தனர்.

கண்டக்டர் ஆக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவை அடைய தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்,பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.அவரது ஆட்சியில் வேலை கேட்டு சென்றேன். எனக்கு உடனே வேலை கிடைத்து விட்டது. 4 நாட்கள் பயிற்சியில் இருந்தேன். இப்போது தினக்கூலி அடிப்படையில் எனக்கு கடலூர் -சிதம்பரம் செல்லும் பஸ்சில் வேலை கிடைத்துள்ளது.இதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்காக தமிழக அரசு, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

துளசிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் செந்தில்முருகனும் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

படிக்க வேண்டும்

spot_img