அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மூன்று ஆண்டுகள் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) பயிற்சி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால், சமுதாயத்தின் மீது அக் கறையும் பொறுப் புணர்வும் கொண்ட ஒழுக்கமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்க முடியும் என்று என்.சி.சி. பயிற்றுநர் சி.ஆர்.காருண்யா தெரிவித்தார்.
பி.இ. பட்டம் பெற்றுள்ள காருண்யா, என்.சி.சி.யில் ‘சி’ சான்றிதழ் தேர்வில் ‘ஏ’ கிரேடு பெற்றுள் ளார். ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரி மற்றும் கீதாஞ்சலி பள்ளியில் என்.சி.சி. பயிற்றுநராகப் பணியாற்றி வரும் 24 வயதே நிரம்பிய அவர் கூறியதாவது:
என்.சி.சி. பயிற்சி மாணவர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு, உடல் தகுதி, தலைமைப் பண்பு, பொறுப்புணர்வு மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இந்தப் பயிற்சியை வழங்கினால், எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியும்.
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய என்.சி.சி. அமைப்பில், சென்னை ஏ, சென்னை பி, கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய ஆறு குழுக்கள் செயல்படுகின்றன. கோவை பிரிவில் 11 பட்டாலியன்கள் உள்ளன.
கோவை குழுவின் கீழ் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. பொதுவாக, ஒரு என்.சி.சி. பிரிவில் 50 மாணவர்கள் இடம்பெறுவர். சில கல்வி நிறுவனங்களில் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளும் செயல்படுகின்றன.
அரசு உதவியுடன் செயல்படும் வழக்கமான என்.சி.சி. பிரிவுகளில், என்.சி.சி. அலுவலர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். முழு சுயநிதித் திட்டத்தின் (Fully Self-Financed Scheme) கீழ் செயல்படும் பிரிவுகளில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பயிற்றுநர்களை நியமித்துப் பயிற்சி அளிக்கின்றன.
என்.சி.சி. மாணவர் களுக்கு பல்வேறு பயிற்சிகளும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. பாறை ஏறுதல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு 20 நாள்கள், நாள்தோறும் நான்கு மணி நேரமும், பள்ளி மாணவர்களுக்கு 40 நாள்கள், நாள்தோறும் இரண்டு மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பில் என்.சி.சி.யில் சேரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் ‘ஏ’ சான்றிதழ் தேர்வை எழுதலாம். கல்லூரி மாணவர்கள் முதல் ஆண்டில் பயிற்சி பெற்று, இரண்டாம் ஆண்டில் ‘பி’ சான்றிதழ் தேர்வையும், மூன்றாம் ஆண்டில் ‘சி’ சான்றிதழ் தேர்வையும் எழுத வேண்டும்.
திறமையாகச் செயல்படும் மாணவர்களுக்கு குடியரசு தின முகாம், பிரதமர் பேரணி உள்ளிட்ட தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
முகாம்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் (Youth Exchange Programme) மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்.சி.சி. மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும் பெறு கின்றனர். என்.சி.சி. சான்றிதழ்கள், முப்படைகளில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடும்.



