ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவத் துறை மற்றும் கோயம்புத்தூர் ரெஸ்பிரேட்டரி சொசைட்டி இணைந்து, 2-வது ஆண்டு ‘தொராசிக் அல்ட்ராசவுண்ட் மற்றும் பேசிக் எக்கோ’ கருத்தரங்கத்தை சனிக்கிழமை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் ரெஸ்பிரேட்டரி சொசைட்டி செயலாளர் டாக்டர் எஸ். கீர்த்திவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரகுமார், டாக்டர்கள் செந்தில்குமார், விஜயரவிந்த், ஹரிவிக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
படுக்கையருகே மேற்கொள்ளப்படும் தொராசிக் அல்ட்ராசவுண்ட் தொடர்பான நோயறிதல் மற்றும் சிகிச்சைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டது.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்புச் செயலாளராக டாக்டர் விஜயரவிந்த் செயல்பட்டார். டாக்டர்கள் செந்தில்குமார், ஹரிவிக்னேஷ் ஆகியோர் செய்முறைப் பயிற்சிகளை நடத்தினர். உயர்தர அல்ட்ராசவுண்ட் கருவிகள் மூலம் மேனிகின்கள், விலங்கு மாதிரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நேரடி ஸ்கேனிங் செய்து மருத்துவர்கள் பயிற்சி பெற்றனர்.



