1931 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராகப் போராடியபோது டோக்ரா ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 22 காஷ்மீரிகளின் தியாகத்தை ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி காஷ்மீரில் பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவு கூர்வது வழக்கம்.
மேலும் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படும். ஆனால் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அந்த விடு முறையை தற்போதைய ஆளுநரின் நிர்வாகம் ரத்து செய்து விட்டது. ஜம்மு- காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு இருந்தபோதிலும் துணை நிலை ஆளுநர் தான் அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மாநில அரசுக்கான அந்தஸ்து குறைக்கப்பட்டு விட்டது.
ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக ஆளும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்படும். ஆனால் இந்தாண்டு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நிர்வாகம் அஞ்சலி செலுத்த தடை விதித்தது. மேலும், ஆளுங்கட்சியின் தலைவர்கள் பலர், நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் தியாகிகள் தினத்தை அனுசரிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது அமைச்சர்களுடன் தியாகிகள் கல்லறைக்குச் செல்லத் தடுப்புச்சுவர் மேலே ஏறிக் குதித்தார்.
பிறகு அங்குள்ள தியாகிகள் கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘‘தியாகிகளின் கல்லறைகளுக்கு எனது மரியாதையைச் செலுத்தி, பிரார்த்தனை செய்தேன்.
இங்குள்ள தேர்ந்தெடுக்கப்படாத அரசு (துணை நிலை ஆளுநரைக் குறிப்பிடுகிறார்) இதற்காக நௌஹட்டா சௌக்கிலிருந்து என்னை நடக்க வைத்துத் தடுத்தது. உள்ளே செல்லும் வழியைத் தடுத்ததால் சுவர் ஏறிக் குதிக்க வேண்டி இருந்தது. எனது கைகளை எல்லாம் பிடித்து இழுத்துத் தடுக்க முயன்றனர். ஆனால், இன்று என்னை நிறுத்த முடியாது” என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.
மேலும், கல்லறையின் உள்ளேயும் தன்னை சிலர் தாக்கியதாக உமர் அப்துல்லா மற்றொரு வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
முதலமைச்சர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சுவர் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு முதலமைச்சரை அம்மாநில போலீசாரே தடுத்து தாக்கும்வகையில் நடந்து கொண்டிருப்பது நடக்கக்கூடாத… வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு.
இப்படி அவமானப்படுவதற்குத் தான் மக்கள் அவரை முதலமைச்சராகத் தேர்வு செய்தார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை ஒன்றிய அரசு நடத்தும் விதம் இதுதானா?, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.
தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, மாநில அரசுகளின் உரிமையை ஒன்றிய அரசு பறித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்தியா கூட்டணி கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் கண்டித்து வருகின்றன. காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளை மதிக்க ஆளுநர் தவறி விட்டார். ஆனாலும் முதலமைச்சர் உமர் அப்துல்லா தடையை மீறி சுவர் ஏறி குதித்து தான் நினைத்ததை சாதித்து இருக்கிறார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் காஷ்மீர் முதல்வருக்கு ஆதரவாக ஒருமித்த குரலில் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்!



