fbpx
Homeபிற செய்திகள்பதக்கம் வென்ற தமிழகத்தின் மூன்று ‘தங்க மகள்கள்’!

பதக்கம் வென்ற தமிழகத்தின் மூன்று ‘தங்க மகள்கள்’!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4.400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்தமுறை 19 பதக்கங்களை வென்ற நிலையில், இந்தமுறை அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தியா இருக்கிறது.

நேற்றைய தினம் நடந்த பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ் இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலத்தை வென்று சாதனை படைத்தனர்.

ஒரே பிரிவில் இடம்பெற்ற இந்திய ஸ்டார் வீராங்கனைகளான இவர்கள் இருவரும் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினர்.
இதில் சோகம் என்னவென்றால் அரையிறுதிப்போட்டியில் துளசியும் மனிஷாவும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தப் போட்டியில் மனிஷாவை விட அபாரமாக விளையாடிய துளசிமதி 23-12, 21-17 என்ற இரண்டு நேர்செட்களில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆனால் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை எதிர்த்து விளையாடிய துளசிமதி 21-17, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் துளசிமதி வெள்ளிப்பதக்கமும், மனிஷா வெண்கல பதக்கமும் வென்றனர்.

மேலும் இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் மூன்று இந்திய வீராங்கனைகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.

வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தாலும் துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ ஆகிய மூவரும் தமிழகத்தின் தங்க மகள்கள் தான் – வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img