கோவை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை, நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, இஸ்ரேல் நாட்டில் உள்ள ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.
இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்தில் நேற்று (28ம் தேதி) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏரியல் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஆல்பர்ட் பின்ஹாசவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தரராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.டேவிட் ரத்னராஜ் ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், “ஏரியல் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகளிடையே, உலகளாவிய அளவில் முதுநிலை பட்டப்படிப்புகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி, மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளல், கல்வி மற்றும் அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ளுதல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் மேம்பாட்டிற்கு நீண்ட கால ஆதரவளித்தல்” ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட உள்ளன.
மேலும், “பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை நல்குதல், ஆராய்ச்சி செயல்பாடுகளில் இணைந்து செயல்படும் வகையில், கல்விசார் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட உள்ளன.
தொடர்ச்சியாக தகவல் தொடர்பு சந்திப்புகளை நடத்துதல், கல்வி மற்றும் ஆராய்ச்சித் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்” என இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.



