சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள், தந்த ஆட்டக்காய், சுடுமண் குழாய், பானைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. .
இதற்கிடையில் கீழடி அகழாய்வு குறித்து அந்த தளத்தில் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு அசாம் மாநிலத்திற்கு இடம்மாற்றியது.
இருந்தும் அவர் தனது அகழாய்வு குறித்து 2023 ஆம்ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறைக்கு ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் உடனடியாக பதிலளித்துள்ளார்.
அவர் ஒன்றிய அரசுக்கு அளித்த பதிலில், ”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை” என அறுதியிட்டுக் கூறி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் 9 மாதங்களுக்குள் அறிக்கையை வெளியிடுவோம் என்று உறுதியளித்துவிட்டு, 15 மாதங்கள் ஆன பின்பு, இப்போது திருத்தம் கோரி ஒன்றிய திருப்பி அனுப்புகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? அதற்கான விடை ஒன்றும் புரியாத புதிர் அல்ல.
தமிழ்நாட்டின் தொன்மை கீழடி அகழாய்வில் ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டது மட்டுமின்றி, அந்த வரலாறு மதச்சார்பற்றதாக இருக்கிறது என்பதும் சமஸ்கிருதத்திற்கு இவ்வளவு ஆழமான, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வரலாறு இல்லை என்பதும் தான் மிகமிக முக்கியமான வெளிப்பாடு. அதனால் தான் கீழடி ஆய்வை ஏற்காமல் வேண்டுமேன்றே ஒன்றிய அரசு தாமதப்படுத்தி தடை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
அதனால் தான், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாச்சார நாகரிகத்தை ஒன்றிய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ? அதனால் தான் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் தேவையற்ற விளக்கங்களைக் கேட்டு உண்மையை மறைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறதோ? என்றெல்லாம் ஆழமான சந்தேகம் எழுகின்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
அவரோடு இணைந்து திராவிடப் பண்பாட்டையும் வரலாற்றையும் மீட்டெடுத்து உண்மை வரலாறு எழுதப்பட, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உறுதியோடு போராட வேண்டும்!