சேலம் மாவட்டத்தில் மொத்தம் 14,953 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.29.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 18,480 பேர் தற்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500/- பெற்று பயன்பெறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் ஓர் அங்கமாக ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றம் ஏற்படுத்தும் திறனாளிகள் என்று வாழ்ந்துகாட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, முதல்வர் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000/-லிருந்து ரூ.1,500/-ஆக 2023 ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.1,000/- மாதாந்திர உதவித்தொகை பெற்றுவந்த 18,480 மாற்றுத்திறனாளிகள் தற்போது மாதம் ரூ.1,500/- பெற்று பயன்பெறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி அடையாள அட்டையில் 40 சதவீதத்திலிருந்து 75 சதவீதத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு இந்த ஓய்வூதியத்தொகை வழங்கப்படுகிறது. 100 சதவீதம் வரை மாற்றுத்திறனுடைய கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர்களுக்கும் இந்த ஓய்வூதியத்தொகை வழங்கப்படுகிறது.
ஓய்வூதியத்தொகையைப்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தகம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுதவிர மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1,000/- முதல் ரூ.7,000/- வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மனவளர்ச்சி குன்றியவர்கள், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு மற்றும் தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புடையவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2,000/- வழங்கப்படுகிறது.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்/ பாதுகாவலர்களுக்குப் பராமரிப்புச் செலவினமாக ரூ.1,000/- வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் கை, கால் இயக்கக் குறைபாடு, தசை சிதைவு நோய், குள்ளத்தன்மை, மூளை முடக்கு வாதம், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகள் நல்ல நிலையில் உள்ள நபர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களையோ அல்லது ஒரு மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டால் வருமான உச்சவரம்பின்றி, கல்வித் தகுதி அடிப்படையில் இல்லாமல் திருமண உதவித் தொகை ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
இதில் தம்பதிகளில் ஒருவர் பட்டதாரியாக இருந்தால் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. சேலம், சூரமங்கலத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, செவ்வாய்பேட்டையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. அரசு நிதியுதவியுடன் 7 அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளிகள், 3 அறிவுசார் குறையுடையோருக்கான தொழில் பயிற்சி மையங்கள், 2 மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் மற்றும் அறிவுசார் குறையுடையோர் செவித்திறன் குறையுடையோர் மற்றும் புற உலக சிந்தனையற்றோருக்கானஆரம்பகால பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ரூ.1,000/- முதல் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுதவிர, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயங்கள் போன்ற உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 69,568 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2021-&2022 நிதி ஆண்டில் 11,909 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.22.75 கோடியும், 1,205 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.44.25 லட்சமும், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியமாக ரூ.8 லட்சமும், 680 பயனாளிகளுக்கு சிறப்புப் பள்ளிகள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.1.61 கோடியும், 377 பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிக்கடனாக ரூ.2.00 கோடியும், 355 பயனாளிகளுக்கு ரூ.44.37 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு ரூ.24.70 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களும், 332 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.73 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்களும் என மொத்தம் 14,953 பயனாளிகளுக்கு ரூ.29.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகையத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து பயன்பெற வேண்டும்.
விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரடியாகயோ அல்லது 0427 – 2415242 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார்.
“செலவினங்களுக்கு பேருதவி”
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை பெற்று பயனடைந்த நரசிங்கபுரம் சின்னப்பராஜ் (46)தெரிவித்ததாவது:
இரண்டு கால்களும் பிறவியிலேயே செயலிழந்த மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகி மூன்று குழந்தைகள், அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். மனைவி சமையல் வேலை பார்க்கிறார். அவருடைய வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
முதல்வர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார். அரசின் சார்பில் மூன்று சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. குழந்தைகளை தினந்தோறும் பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கு, கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவது போன்றவற்றிற்கு, வாகனத்திற்கு தேவைப்படும் பெட்ரோல் செலவினம் உள்ளிட்ட சிறு, சிறு செலவினங்களுக்கு இத்தொகை மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த நல்ல உத்தரவை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.
“குடும்பச் செலவு சுமை குறைகிறது”
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாமோதரன் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியை சார்ந்தவர்கள். மனைவி பூங்கொடி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இருமகள்கள், மகன் உள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/-பெற்று வருகிறேன்.
குடும்ப செலவிற்கும், பிள்ளைகளுக்கான அத்தியாவசிய செலவினங்களுக்கும் மனைவியின் வருமானத்தை வைத்துதான் செலவு செய்து வருகின்றோம். இந்த நிலையில் முதல்வர் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கி உள்ளார். தற்போது குடும்ப செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முதல்வருக்கு நன்றி என்றார்.
தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடார்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.