கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.மருத்துவமனை), ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி நிபுணர்களை ஒன்றிணைக்கும் புகழ்பெற்ற ROSCON 2026 (ரோபோடிக் ஆன்கோசர்ஜரி கான்ஃபரன்ஸ்) கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாடு, அறிவுப் பரிமாற் றம், திறன் மேம்பாடு மற்றும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு சிறப்புமிக்க தளமாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்வை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார். ஆஸ்டர் DM ஹெல்த்கேர் GCC அன்டு இந்தியா மருத்துவ ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பி.சோமசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கத்தின் தலைவர் டாக்டர்.சுப்பையா சண்முகம் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர்களான புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர்.சிவநேசன், ரோபோடிக் மற்றும் HIPEC அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருள் ராஜ், லேப்ராஸ்கோபிக், ரோபோடிக் மற்றும் HIPEC அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன் ரவிசங்கரன் மற்றும் தலைமை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் அறுவை சிகிச்சையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் ROSCON 2026 கருத்தரங்கம் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. துல்லியம், குறைந்த அளவிலான ஊடுருவல்முறைகள் மற்றும் மேம்பட்ட நோயாளிகள் பராமரிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நவீன புற்றுநோய் சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை இந்த கருத்தரங்கம் எடுத்துரைத்தது.
இந்த கருத்தரங்கின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக நேரடி அறுவை சிகிச்சை பயிற்சிகள் அமைந்திருத்தன. இதில் ரோபோடிக் ஈசோபேஜெக்டோமி (Esophagectomy), மேம்பட்ட மார்பக மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் போன்ற சிக்கலான புற்றுநோய் சிகிச்சை நடைமுறைகள், நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால் நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த அமர்வுகள் அறுவை சிகிச்சை திட்டமிடல், அறுவை சிகிச்சையின் போதான உத்திகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு குறித்த விலைமதிப்பற்ற நுட்பமான விஷயங்களை தெளிவுபடுத்தியது.
இதன் மூலம் இதில் பங்கேற்றவர்கள் இத்துறையின் நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கண்டும் கேட்டும் கற்றுக்கொள்ள முடிந்தது.
இந்த மாநாட்டில், Da Vinci Xi போன்ற ரோபோடிக் தளங்களில் நேரடிப் பயிற்சி பெற விரும்பும் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காக பிரத்யேகப் பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன.
நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சையின் துல்லியம், லாவகம் மற்றும் பணிச்சூழல் நன்மைகளை அனுபவப்பூர்வமாக உணர இந்த அமர்வுகள் பங்கேற்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கின.
அறிவியல் திட்டங்களுடன் கூடுதலாக, ROSCON 2026 மார்பக, இரைப்பை குடல், மகப்பேறு மற்றும் சிறுநீரக புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் சிகிச்சை துறைகளில் குழு விவாதங்கள், முக்கிய உரைகள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் கல்விசார் ஒத்துழைப்பை ஊக்குவித்தது.
இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எனப் பலதரப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



