பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியும், அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் அமைப்பும் இணைந்து, விளம்பரம், சந்தைப்படுத்தல், தகவல் தொடர்புத் துறைகளில் மாணவர்களின் தொழில்திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன்படி, கல்லூரியில் விளம்பரக் கிளப்பின் மாணவர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், தொழில்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல், தலைமைப் பண்பு வளர்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், விளம்பரத்துறையில் முதுநிலைப் பட்டயப் படிப்பும் இணைந்து நடத்தப்பட உள்ளது.
கல்லூரிச் செயலர் டாக்டர் கண்ணையன், முதல்வர் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்வியையும் தொழில்துறைப் பயிற்சியையும் இணைத்து, திறமையான வல்லுநர்களை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கம்.



