தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலால், கடந்த 3 மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்து வருகிறது.
ஆரம்பத்தில் புயல் வருமா, வராதா? என்ற குழப்பம் நீடித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பலமான மழையைப் பொழிந்த ஃபெஞ்சல் புயல் மிகப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் புயல் & மழை சேதத்தை சரிசெய்ய நிவாரண நிதி ஒதுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், “தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை முதல்கட்டமாக அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க வேண்டும்“ என கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த முறை சென்னையைப் புரட்டிப்போட்ட புயலும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கனமழை வெள்ளமும் பேரிழப்பை ஏற்படுத்தியது. அப்போது ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரண நிதி கேட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் ஏற்கனவே தரவேண்டிய பணத்தை மத்தியஅரசு கொஞ்சம் தந்ததே தவிர கடைசி வரை பாராமுகமாகவே இருந்து விட்டார் பிரதமர் மோடி.
தனது நிதியில் இருந்து வெள்ள சேத நிவாரணப் பணிகளை செய்து தமிழக அரசே பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுத்தது. இப்போது ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த முறை வெள்ள சேதத்தை கணிக்க குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது மத்திய அரசு. தமிழக அரசின் மீட்புப் பணிகளை அக்குழு பாராட்டிச் சென்றது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். எந்த பலனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.
ஆனால் இம்முறை நிவாரண நிதியை மத்திய அரசு தாராளமாக ஒதுக்கும் என நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாய் என்றால் மாநில அரசுகள் அதன் பிள்ளைகள். தேவைப்படும் நேரத்தில் கை கொடுத்து அந்தப் பிள்ளைகளை கரையேற்றிவிட அந்த தாயின் கரங்கள் ஒருபோதும் தயங்காது.
பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டை சகஜ நிலைக்கு கொண்டுவர, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ள ரூ.2000 கோடியையும் விரைவாக ஒதுக்கித் தாருங்கள். தங்கள் உதவும் கரங்கள் தமிழ்நாட்டை நோக்கி நீளட்டும்.
நம்பிக்கையுடன் தமிழ்நாடு காத்திருக்கிறது!