fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமரே வசைபாடுவதா?

தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமரே வசைபாடுவதா?

ஒடிசா சட்டமன்ற தேர்தலின் போது ஒரு தமிழன் ஒடிசாவை ஆளலாமா? என்று பிரதமர் மோடி சர்ச்சையாக பேசி பிரசாரம் செய்தார். பூரி ஜெகநாதர் கோவில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அவதூறு செய்து இழிவுபடுத்தினார்.


தற்போது, பீகாரில் தேர்தல் ஆதாயத்திற்காக பீகாரிகள் தமிழ் நாட்டில் தமிழர்களால் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று நேற்று முன்தினம் அவர் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு பீகார் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்குக் காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்டமைப்புகளும் வேலைவாய்ப்புகளும் தான். அதனைத் தமிழ்நாடு பல ஆண்டுகாலமாக உருவாக்கி வைத்திருக்கிறது.


புலம்பெயர் பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசியபோது, ’’தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவம், ரேஷன், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் எங்கள் ஊரில் இல்லை.
மிகச் செலவு பிடிக்கும் சிக்கலான மருத்துவத் திற்குக் கூட பணம் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றார்கள்’’ எனப் பெருமை பொங்கச் சொன்னார்கள்.


சென்னையில் வேலை செய்து வரும் பீகாரை சேர்ந்த தனஞ்செய் திவாரி, ரீனா தேவி தம்பதியின் மகள் ஜியா குமாரி, கவுல் பஜார் அரசுப் பள்ளியில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் தேறினார்.


தமிழ்ப் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்று பீகார் மாணவி சாதனை படைப்பதற்குத் தமிழ்நாட்டில் கல்வி விலையில்லாமல் கிடைப்பதுதான். இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்.


இப்படியெல்லாம் பேசுவது பலமொழி பேசும், பல இன மக்கள் வாழும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காதா? வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வரும் நம் நாட்டின் செயல்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காதா? அதுவும் ஒரு பிரதமரே இப்படி பேசுவது அந்தப் பதவிக்கு அழகா? 20 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பீகாரில் வெற்றி பெறுதற்குச் சாதனைகள் இல்லையா?. அதனைச் சொல்லி வாக்கு பெற முடியாது என்பதால் தமிழர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.


வெளிப்படையாகச் சொல்வது என்றால், மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பதை அவர்கள் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையே அம்பலப்படுத்திவிட்டது.


நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் பள்ளிகளில் சத்தான காலை உணவு, பெண் தொழில்முனைவோர், 50 லட்சம் புதிய வீடுகள், 125 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்து தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?


பிரதமர் மோடியின் பேச்சு, இதர மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது பகை உணர்வை தூண்டுவதாகத் தான் இருக்கிறது என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். தமிழக பாஜகவினர் கூட மழுப்பலாம்; ஆனால் மறுக்க முடியாது.


தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு ஏன் இந்த வன்மம்? இனியாவது இது போன்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்.


பிரதமரைப் பின்பற்றி மற்றவர்களும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அபத்தமான பேச்சுகளை முன்னெடுக்கும் முன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img