தெற்கு இரயில்வேயில் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1, 2026 வரை ‘விழிப்புணர்வு வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
தெற்கு இரயில்வேயில், பணியாளர்கள், இரயில் பயணிகள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வளர்க்கும் நோக்கில், அக்டோபர் 26, 2026 திங்கட்கிழமை அன்று ‘விழிப்புணர்வு வாரம்’ தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 முதல் நவம்பர் 1, 2026 வரை நடைபெறும் இந்த ஒரு வார கால நிகழ்வு, “செழிப்புக்கான நேர்மை” (Probity for Prosperity) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள தெற்கு இரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், தெற்கு இரயில்வேயின் ஓய்வுபெற்ற முதன்மை இயந்திரப் பொறியாளரும் என்.எல்.சி மற்றும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனங்களின் முன்னாள் முதன்மை விழிப்புணர்வு அதிகாரியுமான டி. வெங்கடசுப்பிரமணியன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தெற்கு இரயில்வே பொது மேலாளர் திரு. யு. சுப்பா ராவ், கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், மூத்த துணைப் பொது மேலாளர் மற்றும் முதன்மை விழிப்புணர்வு அதிகாரி வி.ஆர்.லெனின், பல்வேறு துறைகளின் முதன்மைத் தலைவர்கள், ஆறு கோட்டங்களின் கோட்ட இரயில்வே மேலாளர்கள் மற்றும் பணிமனை மேலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பொது மேலாளர் யு.சுப்பா ராவ், தெற்கு இரயில்வேயின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ‘நேர்மை உறுதிமொழி’யை வாசிக்க அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பொது மேலாளர் பேசுகையில், விழிப்புணர்வு என்பதை வெறும் ஊழலைக் கண்டறியும் அல்லது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கும் ஒரு கருவியாக மட்டும் பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டார். வலுவான அமைப்புகள், எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள், பயனுள்ள உள் கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் ஊழலைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், நேர்மை என்பது ஒவ்வொரு அதிகாரி மற்றும் பணியாளரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் எடுத்துரைத்தார்.
பிரதம விருந்தினர் டி.வெங்கடசுப்ரமணியன், தனது சிறப்புரையில், நிறுவன இலக்குகளை அடைவதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அரசு ஒப்பந்தங்கள், ஒப்பந்தப்புள்ளி வெளியீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளிக்குப் பிந்தைய திருத்தங்கள் குறித்த நடைமுறை நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கண்காணிப்புத் துறை சிறந்த நடைமுறைகள் மற்றும் வழக்கு ஆய்வுகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு அறிக்கை 2026-ஐ வெளியிட்டது.
மேற்கண்ட தகவலை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.என்.நரேன் தெரிவித்துள்ளார்.



