தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் மேற்கூறையுடன் கூடிய வாகனம் நிறுத்தும் இடம், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க கட்டிடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் தொடக்க விழா மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். வாசகர் வட்ட நிர்வாகி மணி, தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை முன்னாள் மாவட்ட தலைவர் பச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து அவர் நூலக வாசகர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி நூலகத்துக்கு என்ன தேவை என்பதை கேட்டு அறிந்தார்.
இந்த விழாவில் வாசகர் வட்ட தலைவர் டாக்டர் செந்தில் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் சொல்லின் செல்வம், வாசு நாயுடு, வெங்கடேசன், சத்தியமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இரண்டாம் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.



