நாமக்கல்லில் இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத் தினரை பாராட்டி, விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவ லர் டாக்டர் ரெ.சுமன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி, தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உறுப்பு தானம் செய்பவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் இந்திய உறுப்பு தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முழுவதும் நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று இந்திய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உறுப்பு தானம் பற்றிய வெகுஜன விழிப்புணர்வு பிரச்சாரம்
என்னும் தலைப்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, மத்திய அரசின், தேசிய உறுப்பு மாற்று ஆணையம், NATIONAL ORGAN AND TISSUE TRANSPLANT ORGANISATION (NOTTO) மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், நாமக்கல் – மோகனூர் சாலையில் செயல் பட்டு வரும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (பழைய ஜி.ஹெச்) இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே.சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ரெ.சுமன், மாவட்டத்தில் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறுப்பு தானம் வழங்கி இறந்த பின்னும் வாழவைத்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இம்மைய வளாகத்தில் இருந்து இந்திய உறுப்பு தான தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவம் – மருத்துவம் சாரா மாணவ-மாணவிகள், பிற செவிலியர் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்
‘உடல் உறுப்பு தானமே, உலகத்தில் சிறந்த தானம்; இருக்கும் வரை ரத்த தானம், இருந்த பின் உறுப்பு தானம்; உயிர் தமிழுக்கு, உறுப்புகள் சக உயிர்களுக்கு’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை, ஏந்திய படியும் கோஷங்களை எழுப்பியும் சென்றனர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர் .
இந்தப் பேரணியானது, நாமக்கல் மோகனூர் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பிரதான சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் நாமக்கல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் குணசேகரன், தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரகுகுமரன், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள்,அரசு மற்றும் தனியார் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.