ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
எந்த நேரத்திலும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவுக்கு பின்னர் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது இந்திய ராணுவம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து, எல்லைக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதே என்றும், அண்டை நாட்டுடன் மோதலை அதிகரிப்பதற்கான நோக்கம் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் நேற்றைய தாக்குதலில் 3 இந்திய அப்பாவி பொதுமக்களும் இன்றைய தாக்குதலில் 6 இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காஷ்மீர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக காஷ்மீர் மக்கள் ஒன்று திரண்டு பாரத் மாதா கீ ஜெய் என்ற வெற்றி முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராணுவத்திற்கு தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்துக்கு சல்யூட்!



